இரசிகை-இரசித்தவை

Saturday, May 27, 2006


எனது பார்வையில் உராய்வு

யாழ் களத்தில் எல்லோரினது விமர்சனத்தை பார்த்த பின்பு எனக்கும் அந்தப்புத்தகத்தை எப்படியாவது வாசிக்க வேண்டும் என்று ஆவல் என்னுள் கொளுந்துவிட்டு எரிந்தது. எனது நீண்ட நாள் ஆவல் இன்றே பூர்த்தியடந்தது. வெண்ணிலா ரமா போல எனக்கு ஆற அமர இருந்து வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கவிதைப்புத்தகம் கையில் கிடைத்தவுடன் அதை வாசித்து முடிக்க வேண்டும் என்ற ஒரு வேகமே என்னுள் ஏற்பட்டது.

கண்ணை கவரும் நிறத்துடன் கூடிய அட்டைப்படத்துடன் அன்புடன், உராய்வுடன், நன்றியுடன் என்று பக்கங்களில் கி.பி அரவிந்தன் அவர்களின் முன்னுரையுடன் கவிஞனின் (சஞ்சீவ்காந்த் )அறிமுகமுகத்துடன் கூடிய நன்றியுரையுடன் ஆரம்பிக்கிறது. ஓவியர் மூனா அவர்கள் ஒவ்வொரு கவிதைகளுக்கும் அதற்கு தகுந்த மாதிரியான உணர்வுகளை படங்களிற்கூடாக கொண்டு வந்திருக்கிறார்.

“காலத்தின் கவிக்கூர் இவன்” என்ற ஏ.சி. தாசீசியஸ் அவர்களின் கூற்றை மெய்பிப்பது போல் கவிதைத்தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் அருமை எதை விடுவது எதைப் படிப்பது என்று பெரிய போராட்டமே என்னுள் நடந்தது. பொதுவாக நான் ஒரு புத்தகம் கிடைத்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடி ஓடி நுனிப்புல் மேய்ந்துவிட்டு இறுதியாகத் தான் முன் அட்டைப்படத்தில் இருந்து கடசிப் பக்கம் வரை வாசிப்பேன். ஆனால் இந்தப் புத்தகம் என் கை கிடைத்த போது அட்டையில் இருந்து கடைசி மட்டை வரை வாசித்து முடித்துவிட்டுத்தான் மற்ற அலுவல் பார்த்தேன் என்றால் மிகையாகாது,

கவிதைக்குள் முதலாவதாக புதிய ஆண்டு ஒன்றை வரவேற்கின்றதான கவிதை மிகுந்த ஆவேசத்தோடும் கேள்விக் கணைகளோடும் தொடங்கி புதியதோர் ஆண்டாய் மிளிர நீ என்னென்ன எல்லாம் செய்ய வேண்டும் என கட்டளை போடுவதோடு நில்லாது சில வரங்களையும் கவிதையூடாக கேட்கிறார் கவிஞர்.

“வேண்டும்
வேண்டும்
வேண்டும் விடுதலை
வேள்வித் தீயில் மூழ்கும்
தீவின் தேச விடுதலை”
என வரம் கேட்கிறார் இளைஞன்

அடுத்த கவிதை தமிழ்மொழியின் சிறப்பு பற்றிக் குறிப்பதாக அமைகிறது. அழகாக சிலேடைச் சொற்களால் தமிழுக்கு அழகு சேர்த்து கவிதைக்கு அழகு சேர்த்துள்ளார்.
“செத்து மடியும் என்பார்க்கும்
செம் மொழித் திறன் விளக்கும்
செய்யுட் காலம் கடந்தும்
செம்மதி கண்டு தமிழ் சிறக்கும்”
என மொழி அழகை கூறிகிறார்.

அடுத்தகாக தான் பிறந்து வள்ர்ந்த மண்ணை தாயாக உருவகித்து மிகவும் உருக்கமாக மடல் வரைகிறார்.
"அன்புள்ள தாயகமே..
ஆசை மகன் எழுதும் மடல்

நானிங்கு நலமம்மா
நீயங்கு நலம் தானா?
எழுத மனம் நினைக்கிறதே
கண்ணீர் அதை நனைக்கிறதே "
என கண்ணீர் உடன் ஆரம்பித்து...

"சிந்தனையும் சிரிக்கிறதே
சித்திரையும் அழைக்கிறதே
எத்தனை நாள் ஆகியதோ

உன் மடியில் நானுறங்கி." என மிகவும் தாபத்துடன் தாயின் அரவணைப்புக்காக ஏங்கும் ஒரு குழந்தையாக அங்கே கவிஞனை காண முடிகிறது. புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழனின் ஏக்கங்களையும் அந்த வரிகள் வெளிப்படுத்துகின்றன.

அன்னையின் தாலாட்டில் கண் உறங்கியவர்கள் தானே நாங்கள். ஆனால் தற்காலத்தில் தாலாட்டு பாடல்களை கேட்பதே மிகவும் அரிதாகிவிட்டது. எமக்காக உயிர் நீத்த மாவீரார்களின் புகழை தாலட்டாக பாடி விடுதலையின் பங்குதாரர் என்னும் தலைப்பில் புதுமையாக தந்து இருக்கின்றார்.
”கண்ணீரால் பாடும் தாலட்டு
செந்நீரில் கலந்து வீறூட்டும்
மண்ணாண்ட மன்னர் பாராட்டு
மாவீரர் உம்மிலே பாலூற்றும்”

“சுட்டெரிக்கும் சூரிய வீரர்
துட்டர் படை கொன்ற வீரர்
விட்டெறியும் வேலாய் வீரர்
எட்டிப்பகை வென்ற வீரர்” என அழகாக மாவீர புகழைக் கூறி நிற்கிறது.

அடுத்தது இவரது கோபப்பார்வை கடவுள் மீது சென்று நியாமான கோபக்கனலான கேள்விகளுடன் சிந்திக்க வைக்கிறார்.
“நாதியற்று வாழும் நம்மவர்க்கு
நாளும் சோறுமே இல்லையடா
நாள்தோறும் இந்த வெற்று
சிலைக்கு பூசைகள் ஏதுக்கடா?” என கோபக்கணைகளை தொடுக்கிறார். முக்கியமாக புலம் பெயர்ந்து கோயில்கள் அமைப்பதை வியாபாரமாக கொண்டிருப்பவர்கள் உணர வேண்டிய நிதர்சனமான வரிகள்.

கவிதை என்ற தலைப்பிலான கவிதையில் கவிஞனுக்கே உரிய மிடுக்கு வந்து விடுவதாக தெரிகிறது.
“நல்லதை எடுத்துப் பதமாக்கி
இனிப்பிட்டு இளக வைத்து
மென்றுண்டு சுவைத்தால்
கக்கி விடுவேன்.” என்று கூறிவிட்டு என்னை யாரென்று நினைத்துக் கொண்டீர்கள் என குரல் எழுப்புவது போல்

“கொத்தித் தின்று
உம்தன் உடல் கொழுக்க
விரைந்து கரைந்துடன்
வாரீர் காக்கைகளே..” என அறைகூவல் விடுகிறார். இத்தனை துடுக்குத்தனம் கூடாது என நினைத்து விட்டு அடித்த வரியை பார்த்தால்

“இப்படித்தான் என் எழுதல்
அன்றைய கிறுக்கல்கள் பார்த்து
வெட்கித்தலைகுனியும்
இன்றைய எனது கிறுக்கல்கள்” ஆகா கடசில கிறுக்கல்கள் என்று சொல்லிக் கவுத்துப் போட்டாரே.

விருப்பு வெறுப்பு என்கின்ற கவிதை வாசிப்போரை வெறுக்காமல் விரும்பும் விதமாக எழுதி இருக்கிறார். புலியை வெறுப்பவள் புலியை விரும்புபவனை அணைப்பது போல ஒரு கவிதை. இக்கவி கவிஞனின் சிந்தனை மீது வாசித்தால் விருப்பம் வரும்.

அடுத்த பக்கத்திற்குள் நுழைகிறேன் இவள் யாரோ என்ற தலைப்பிலான கவிதைமின் வழியில் சந்தித்து அன்பு வார்த்தைகளை பரிமாறிய அவளே தன் தோழி என அழகாக சொல்லி இருக்கிறார். தொடர்ந்தும் வளரட்டும் அவர்கள் நட்பு
”கருவிழிப் பார்வை
கண்டதுமில்லை
இருவிதழ் மோதிக்
கேட்டதுலில்லை
இவள் செவியோரம்
பேசியதுமில்லை”
என காதலியை வர்ணிப்பது போல ஆரம்பித்து

“இளவயதினள்
இவள் யாரோ??
என் தோழி!”
என சாதாரணமாக கூறி முடிக்கிறார்.

அடுத்ததாக இயற்கையயும் பெண்ணையும் ஒப்பிட்டு அழகாக பாசமாக நகைச்சுவையாக வர்ணிக்கிறார், அடுத்து சிற்பி என்ற கவிதையில் ஒன்றுமே சொல்ல இயலாத நிலையில் சொல்வதைப் போல்
“ஐயோ .. ஐயோ..
உயிரின் உயிரே
காதல் சிற்பம் செதுக்கிறாள்”
என கூறிகிறார்,

அடுத்த காதல் நோய் என்ற கவியில் அழகுற எந்த ஒளிவுமறைவுமின்றி அத்தனை உணர்வையும் இயல்பாக அக்கவிதையில் கொணர்ந்துள்ளார்.

“அடியே சகியே வலிக்குதடி
கண்ணில் நீர்தான் துமிக்குதடி.
உள்ளங்கால்கள் கூசுதடி
உச்சந்தலை கொதிக்குதடி
மூச்சுக்காற்றும் உளறுதடி.
மண்டைத்தேசம் குளிருதடி.” எனக் காதலை நோயாக வர்ணித்தவர். காதல் என்றால் என்ன என உணர முயல்கிறார் அடுத்த கவிதையில்.

“காதல் என்பது பாடமா
வாழ்க்கைக் கடலின் ஒடமா
தாங்கிச் செல்வதில் பாரமா
தூங்கும் மனதில் ஈரமா”
என அழகாக கூறுகிறார்.

வெளிச்சக்குப்பை என்ற கவிதையில் மழலை உணர்வோடு தனது தோழியை அழைக்கிறார்.
“போலி வாழ்க்கை
வாழ்தல் முடித்து
பொய்யில் சேர்தல்
பழமை துடைப்போம்

வெளிச்சக்குப்பை கிளறிக் கிளறி
எங்கள் தீனி
கண்டுபிடிப்போம்”
என வீரம்பேசி சிந்தனைச் சிறகை விரிக்கிறார்.

உலகம் தின்போம் கவிதை வாசிப்போரின் மனதில் நிச்சயமாக ஒரு புத்தணர்ச்சியை ஒரு புதுவேகத்தை தருவதான கவிதையா இருக்கும். நல்ல நம்பிக்கையை தரக் கூடியதான வரிகள்.
“விழுந்து விழுந்து
பட்டுத் தெளி
பொறி பொறியாய்
பட்டுத் தெறி
திரைகள் அகற்றி

முன் தெரி
திமிறித் திமிறி
முன் நகர்.” என எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து தன்னை தானே திடப்படுத்தி தனது உறுதியான நடையுடன் தனது பயணத்தில் முன்னோக்கி செல்கிறார்.

துடிப்பின் துளி கவிதை நிறைய நம்பிக்கைகள் தாங்கி வருகின்றது.
“எடுத்திடும் விடயத்தை
முடித்திடும் வரையினில்
உறக்கத்தை மறந்திடுவோம்”
என நல்ல நம்பிக்கை தரும் விதமாக கூறுகிறார்.

செயற்படு பொருள் என்னை மிகவும் கவ்ர்ந்த கவிதை பலமுறை என்னை வாசிக்க தூண்டிய கவிதை. இயல்பாக சின்ன சின்ன வரிகளுக்குள் பல உண்மைகளை கூறியிருக்கிறார்
“சமூதாயத்தை
நிர்வாணப்படுத்து அதன்
காயங்களில் முத்தமிடு
அழுக்குகளை நக்கு.

உண்மைகளை
கட்டிப்பிடி
உன் சொல்லைக்
கவ்விப்பிடி”
மிகவும் கூர்மையான அம்பு பாய்ந்தது போல் ஒவ்வொரு வரியும் அமைந்திருக்கிறது. பாராட்டுக்கள்

ஒருமுறை என்ற கவிதையில் தான் நாளை கார்ல்ஸ்மார்க், சோக்கிடாஸ், சேகுவரோ போன்று தானும் அவர்களைப் போல உருவாகும் ஒரு இளைய தலைமுறை என கூறுகிறார். ஆச்சரியப்பட வைக்கிறது அவரது தன்நம்பிக்கை. வாழ்க அவரின் தன்னம்பிக்கை.
“எடிசன் நண்பா
ஆயிரம் கண்டுபிடிப்புக்களில்
நீ பிறப்பு எடுத்ததாய்க்
கேள்விப்பட்டேன்

ஆனால் நீ
ஆயிரம் தடவைகள்
எனக்குள் பிறக்கிறாய்.

நானும் உங்களைப்போல்
நாளை யாருக்கோ
பலமுறை ஆகப்போகும்
இளைய தலைமுறை.”

அடுத்த கவிதையில் திலீபனையும, காந்தியையும் இணைத்து இன்றைய திலீபன் தான் அன்றைய காந்தி எனக் கூறுகிறார். உண்மையாய் இருக்குமோ? அதே போல் இன்றைய இந்த கவிஞன்தான் எடிசனாயிருப்பானோ...!??? என எண்ணத் தோன்றுகிறது.

பெரியார், பூமிப்பந்து போன்ற கவிதைகளும் அவருக்கே உரிய பாணியில் அமைந்துள்ளது. பாராட்டத் தக்கது.

அடுத்து மனிதமனம் என்ற கவிதையில் அனைத்து மனித மனங்களையும் சிந்திக்க வைத்து இருக்கிறார். இத்தனை வயதுள் அத்தனை அனுபவமா..!! என வியப்பில் இந்த கவிதையை படிக்கும் அனைத்து மனிதமனங்களை ஆழ்த்துகிறார்.
“ஆசைகள் அங்கே
அனுபவிக்கும்
அவை அர்த்தங்கள்
அற்றனவாயிருக்கும்

ஆத்திரம் அங்கே
அவதரிக்கும்
அது அத்திவாரமாய்
அழிவிலிருக்கும்

குழப்பங்கள் அங்கே
குடியிருக்கும்
குற்றங்கள் பலதின்
கொடி பறக்கும்”
என ஒவ்வொரு மனித மனங்களையும் புட்டு புட்டு வைக்கிறார்.


ஒளி வழி விழி என்ற தலைப்பில் அமைந்த கவிதைகள் வாழ்க்கையை தொலைத்து இந்த உலகத்தோடு ஒன்றிடமுடியாத புலம் பெயர்ந்தவருக்கான ஒரு வழிகாட்டல் போல் அமைந்துள்ளது.

“ ஏ ..
சமுதாயமே!”
என இவ்வாறு ஒளியில் விழித்து

“காலத்தின்
கண்ணீரில்
நீ உன்
சுயசரிதையை
எழுதுகிறாய்

நிழலின்
நிசத்தை
நீ
உணர
மறுக்கிறாய்
ஏனென்றால்

நிம்மதியை
நிர்வாணம்
ஆக்கினாயல்லவா

அதனால்த்தான்

நன்மதியில்
உன் விதியை
உணர
மறுக்கிறாய்”
என அழகாகக் கூறுகிறார். அத்துடன் நில்லாது வழி என்ற கவி மூலம்

“நாளைய
உலகின்
நம்பிக்கையை
சுவாசி”
என தனிமையில் தவிப்பவருக்கு நல்லதொரு நம்பிக்கை வழிகாட்டியாகிறது இந்தக் கவிதை. அத்துடன் விழி என்ற கவியில்

“ஒளியின்
ஓரத்தில்
வழியின்
விழிகள்
தெரியும்


கண்டுகொள்” என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

காதல் பகிர், ஊடல், கூடல், அனைத்து தலைப்புகளிலும் வரைந்த கவிகள் அற்புதம் புலம்(பல்) இலக்கியம்,மீண்டும் சந்திப்போம் ஆகிய கவிதைகளில் சமூக அக்கறையை கருத்தில் கொண்டு கூறப்பட்டளது.

புலம்(பல்) இலக்கியம் என்ற கவியில்

“கூட்டிலே பூட்டிய
குரங்குளாக வெளி
நாட்டிலே மாட்டிய
நம்மினம் ஐயனே"
என நல்ல கற்பனையுடன் கூடிய துணிவுடன் புலம்பெயர்ந்தோரைக் குரங்குகள் என விழிக்கிறார். புலம்பெயர்ந்து வாழும் நாம் மற்ற இனத்தவர்களை பார்த்து அவர்களின் நடை உடை பாவனைகளுக்கு மாறி மாறி தாவிக் கொண்டிருக்கிறோம் ஆகவே அவர் நம்மை பார்த்து குரங்குகள் என விழித்தமை தப்பில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

மூடக்கொள்கைகளை எதிர்க்கும் ஒரு புரட்சி கவிஞனாக தெரிகிறார் இந்த இளைஞன். நாடு சிதறி சின்னபின்னம் ஆவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை அதனை மீண்டும் சந்திப்போம் என்ற கவிதையில் அழகுற எடுத்துக் கூறுகிறார்.

கண்டுபிடி, மூன்றெழுத்து, உறுதிசெய் என கவிகள் விரிந்து செல்கின்றன. இந்த இளைஞனை எமது போர் எப்படியெல்லாம் கவி எழுதத் தூண்டி இருக்கின்றது என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. புலம்பெயர் வாழ்வு பயங்கர வாதம் இவை முடிவடையவே மாட்டாது போல் தெரிகிறது என்று கூறி இறுதியில் இத்தகையவை நடந்தேறினால் அழிவு தான் நிச்சயம் என மூன்றெழுத்துக் கவிதை மூலம் புரியவைக்கிறார் இளைஞன்.
“பயங்கர வாதத்தின்
தேவதை
முடிவு
அழிவு”
என்கிறார்

புகைக்காதீர், மரபணு கணணி, ஒசோன் என கவிதைகள் விரிகிறது. என்னை ஆச்சரியப்பட வைக்கிறது இந்த இளைஞன் விஞ்ஞானத்தையும் விட்டுவைக்கவில்லை. அடுத்த கவிதையான இணையம்
"முகமூடிகள் கூட அங்கு
முகமூடி அணிகின்றன.
அதையும் அடிக்கடி மாற்றல்"
எனப் புதியதொரு பயங்கரவாதமாக மனதில் தோன்றுகிறது. யாழ் இணையத்தை பற்றி தனது சொந்த அனுபவத்தில் எழுதியிருப்பாரோ என எண்ணத்தோன்றுகிறது.

அடுத்து ஒரு குட்டிக்கவிதை கணனி.
"உடை,
உணவு,
உறையுள்
நான்காவது
அத்தியாவசியம்
கணணி"
என்கின்றார் இந்த இளைஞன். மனிதனின் அடிப்படை தேவைகள் மூன்று என்றே படித்திருந்தோம். இங்கே நான்கவதாக கணணியையும் சேர்த்திருப்பது அவசியமெனவே தோன்றுகின்றது.

அடுத்த கவிதையில் பெண்ணியப்பேச்சுக்கள் பேசப்படிகின்றன.
"அடக்கம் என்றார்
அதில் அர்த்தம்
அடங்கி கிடக்கும் என்றார்.
அவளை முடங்கச் செய்தார்."
பெண் விடுதலை பற்றிப் பேசிப் பேசியே பெண்களை முடங்க வைக்கும் மூடர்களுக்கு சொல்லடி கொடுக்கிறார்.
“குனிந்த தலையினிப்
போதும்
நிமிர்ந்து பார்
அதுகாணும்

அடக்கம் என்பது
மனித பண்பு
அடங்கிக் கிடந்தால்
இனி வம்பு”
என ஒவ்வொரு பெண்ணையும் சிந்திக்கத் தூண்டுகிறார். அத்துடன் இல்லையே என முடிவின் வரிகளாய் அமைந்த கவிதை ஒவ்வொரு பெண்ணையும் சிந்திக்கத் தூண்டுகின்றது.

திருமண பந்தத்திற்கும், சீதனப்பிரியர்களிற்கும் நல்ல சாட்டை அடி கொடுத்தது போல் அமைந்திருக்கிறது திருமணம் என்ற கவிதை...
“ அங்கீகாரமா?
அவநம்பிக்கையா?
தாலியா?- கணை
யாழியா?


உடல்களுக்கு
முடிச்சுப்போடும்
ஒப்பந்தம்”
என சமூதாய சம்பிரதாயங்களை தூக்கி எறியும் துணிவை இக்கவியில் காணக்கூடியதாக இருக்கிறது.

எழுவாய், அகதித்தோற்றம், நான் மட்டும் என்று கவிதைகள் விரிந்து செல்கின்றன. நான் மட்டும் என்ற கவிதை சிறிய குழப்பத்தில் உருவானது போல் தெரிகிறது.
“வெளிச்சம் தேடி
இருட்டுக்குள்
பயணிக்கிறேன்..”
என யாருமில்லமால் தனிமை வாழ்கின்றேன். எதிரே எனக்கு ஆறுதல் சொல்லி அரவணைக்கவும் ஒருவரும் இல்லை. அதே நேரம் எனக்கு எதிரியாகவும் யாரும் இல்லை என்று தனது தனிமையை நினைத்து கவி வடித்துள்ளார்.

அடுத்த வியாபரம், கற்பனை வாழ்க்கை, இடைவெளி என கவிதைகள் பரந்து செல்கின்றன. வாழ்க்கை என்ற தலைப்பிலான கவிதையும் இடைவெளி என்ற தலைப்பிலான கவிதையும் வாசகரை குழப்பத்திலிருந்து தெளிய வைக்கிறது.
“வாழ்க்கை
"பிறப்புக்கும்
இறப்புக்கும்
தோன்றிய
முரண்பாடு" எனக் கூறுகிறார். தொடர்ந்து இடைவெளி என்ற கவிதை

“இடைவெளி இல்லாமல் போகுமா?
இல்லாமல் போனாலென்ன ஆகும்?
விடைதெளிவில்லாமல் இப்போது
இடைவெளிக்குள் நான்”
எனக் கூறுகிறார்.

உண்மை என்கின்ற கவிதையீனூடு கவிஞனும் தன் குழப்ப நிலையில் வெளிவருவது போல் தெரிகிறது.
“உண்மை உணர்வுகளை உன்னுள் உணராதவன்
உண்மை உணர்வுகளை உன்னுள் துளிர்க்காதவன்
உணரும் உர்வுகளை உன்னுள் நினைக்கதவன்
உன்னையே உணரா நீ உண்மையா அறிவாயா?” எனக் கேள்வி கணைகளை தொடுக்கிறார்.

இரவு என்ற கவிதையில்
“வெண்நிலவுக்கும்
விண்மீனுக்கும்
கிடைத்த
விடுதலை”
என்கிறார். இக்கவிதையில் எதையோ தேக்கி வைத்திருப்பது போல் தெரிகிறது. அதனை அடுத்த சுதந்திரம் என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார்.

“சுதந்திரன் இயற்கையின் சுய தந்திரம்
மானுடர் நாவுளறும் உரிமை மந்திரம்
வேட்கை என்பது இதற்கொரு கரம்
விடுதலை வேண்டிடத் தரும் வரம்”
என்கிறார்.

மீண்டும் நம்பிக்கை விதைகளை தூவிச் செல்கிறது அடுத்த கவிதையான நம்பிக்கை, இந்த இளைஞனின் நம்பிக்கையை கண்டு வியந்து நிற்கிறேன்.
“எட்டித்தொடு எட்டித்தொடு
வானம் கூடக் கிட்ட வரும்
நட்டுவிடு நட்டுவிடு
நம்பிக்கையை நட்டுவிடு”
என அழகாக கூறுகிறார்.

அடுத்து அலை என்ற கவிதையை மிகவும் இரசித்து அனுபவத்து எழுதியுள்ளார் போல் தெரிகிறது. பாராட்டுக்கள். கடசியாக பகை ஏதுள..? என்ற தலைப்பிலான கவிதை நம்பிக்கை, தவிப்பு, கோவம் எனப் பல உணர்ச்சிகளைக் காட்டுகிறார்.
“மலை போல் எழ
தலைமேல் விழ
உலகம் அழ
பகை ஏதுள..?
எனக் கேட்டு

“தூறும் மழை
புழுதீ மணல்
தாய் மண் மடி

இவையாவு மெம்
உறவான பின்
துயர் சூழுமோ
உயிர்வாடுமா?”
எனக் கேட்கிறார். ஒவ்வொரு கேள்வியையும் சிந்தித்து கோர்த்த உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள்.


அப்பப்பா.. ..!!! எல்லாக் கவிதைகளுமே அருமை அருமை அருமை..!!!!!. வாசிக்க வாசிக்க தெவிட்டாத தேன் போல் இருந்தாலும் சிந்திக்கவும் தூண்டுகிறது. ஒவ்வொரு கவியும் மிக அழகாக தனித்தனியே அவற்றிற்கான சிறப்புக்களை சொல்லி செல்கின்றன. இவ்வளவு ஆற்றல்களையும் கொண்டுள்ள ஒரு கவிஞனின் கவிதை ஒவ்வொன்றினையும் படிக்கின்ற போது அவனது எண்ணக்கருக்களை மிகவும் அழமாய் உள்வாங்கவைத்து, அடுத்த கவியினை வேகமாய் தாண்டிடும் ஆவலைத் தூண்டியது. புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளைய தலைமுறைக்கு நல்ல எடுத்துக்காட்டாக திகழும் இவ் இளைஞன் மேலும் இத் துறையில் சிறந்து விழங்க இந்த இரசிகையின் வாழ்த்துக்கள்.

Thursday, May 25, 2006


















இணையக் காதல்..?!

இணையத்தில் இணைந்து
இதயத்துடன் கலந்தவனே..
என் இதயச் சுவரெல்லாம்

உன் பெயரையே எழுதுகிறேன்..!

உனைக் காணாத நேரத்தில்
கவலையில் கரைந்தவள்
உன்னைக் கண்டபோது
கண்மூடி இருந்தேன்..
காரணம் தான் தெரியவில்லை..!


நினைவுகளின் தேடல்களாய்,
நீ எனக்குள் இருப்பதனால்,
உன் நினைவுகள் இன்றும்,
தொடர்கதையாய் தொடர்கிறது.
உன்னோடு தொடர்பொன்றை
ஏற்படுத்த துடிக்கிறது .

என் இதயம் - ஆனாலும்... !

நெஞ்சுக்குள்....ஓர் படபடப்பு
இதயச் சுவரையும்

துளைபோட்டு ஈர்த்திட்ட
உன் அன்பை நேசிக்கிறேன்..
உன்னையும் நேசித்தேன் - ஆனாலும்
கழுத்துவரை வந்த வார்த்தை
கடைசிவரை சொல்லாமலே..

கனவுக்குள் முடங்கியது..!

Monday, May 22, 2006


மனதில் இன்றும் ஈரமாய்.....!

பூவரசம் இலையில் பீப்பி ஊதி..
லக்ஸ்பிறே பேணியில் மேளம் கொட்டி..
வாழைநாரில் தாலி கட்டி..
மண்சோறில் விருந்துவைத்து...
ஆடிக்களித்த நாட்கள் அச்சச்சோ அழகே அழகு...!

தேனீர் குவளையில் ஒலிபெருக்கி செய்து...
பப்பாசி குழலில் ஒலிவாங்கி கட்டி...
ஊர்முழுக்க கேட்குமென்று நினைத்து...
உரத்து உரத்து பாடினது நினைச்சாலே..
இனிக்குது நெஞ்சை விட்டு போக மறுக்குது...!

மாங்காய் சம்பல் போட்டதும்..
நெல்லிக்காய் பொறுக்கி தின்றதும்..
பொன்வண்டு பிடித்து தீ பெட்டியில் அடைத்து...
குஞ்சு பொரித்திட்டுதா என்றே...
நிமிடத்துக்கு ஒருதரம் பார்த்து பார்த்து...
இருந்த காலம் கொல்லுதே மனசை கொல்லுதே..!

தீ பெட்டியில் தொலைபேசி பேசி மகிழ்ந்து...
தென்னம் மட்டையில் கிரிக்கெட் ஆடி மகிழ்ந்து...
புளியம்விதையில் தாயம் விளையாடியதெல்லாம்...
மனசை விட்டு போக மறுக்குதே..
மறுபடியும் அந்நாளுக்காய் மனசு ஏங்குதே...!

எறிந்த கல்லு திரும்பி வருவதில்லை..
சென்றவயது சென்றதுதான்-இருந்தும்
அந்த மழலைகால நினைவில்...
மனது மயங்கிபோவதை யார் தடுப்பார்...?!