இரசிகை-இரசித்தவை

Wednesday, March 29, 2006

இரண்டடிக்குள் இரண்டரை கோடி!


நேற்றுத்தான் அவன்
வீடு கட்ட கண்டேன்.....
குடும்பத்தோடு வந்து
இன்று குடிபுகுந்து விட்டான்!
அவனும் கறுப்பு ..
அவளும் கறுப்பு..
மகனும் கறுப்பு..
மகளும் கறுப்பு...

ஆடம்பரம் ஏதுமற்ற வீடு...
அருகில் நடப்பதை பற்றி
எந்த அக்கறையும் அங்கில்லை...
மின்சாரம் இல்லையென்ற
கவலை இல்லை..
மேதாவி தனமான
பேச்சுகளும் அங்கில்லை...

பசி என்று வந்துவிட்டால்
காதலுடன்.. அவன் இதழால்
அவளுக்கு ஊட்டிவிட..
தான் பெற்றதை பிஞ்சுகளுக்கும்
இதழாலேயே பரிமாற
ஒரு அள்ளு உணவுக்குள்
நான்கு உயிர்கள் பசியாறுமா?

அழகில்லைத்தான்..
அசிங்கம்தான்...
ஒளித்திருந்து பிறர்
வாழ்வை பார்ப்பது..
உதவாத பழக்கம் தான்...
இருந்தும் மனம் ஏங்கியது...........

அடடா....
அழகிய வாழ்வென்பதை
இவர்களின் பெயரில்
மட்டும் எழுதி வைத்துவிட்டு
ஒளிந்து கொண்டவனே..
இறைவா... எங்களுக்கும்
கொஞ்சம் தாவேன் என்றபடி!

அங்கே என்னடி பராக்கு
அதட்டினாள் அம்மா..
திரும்பி திரும்பி அவர்களை
பார்த்தபடி வீட்டுள் நுளைந்தேன்!

எம்முள் சிலருக்கு ஏன்
இப்படி ஒருவாழ்வு இல்லை??
வாழ தெரியவில்லை??
ஆயிரம் ஆயிரம் கேள்விகள் என்னுள்..
செவ்வந்தியை சுற்றிய தேனீக்களாய்..
விடைமட்டும் கடலில் கரைத்த உப்பென
இன்னும் காணோம்!

இரண்டடி கூட கொள்ளா கூட்டுக்குள்
இரண்டரை கோடி சந்தோசங்களா?
ம்ம்ம்ம்ம்..........
காகம் கொடுத்து வைத்த பிறவிதான்!!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ..!!


உலகில் வாழும் உயிரினங்களிலே மனிதன் உயர்ந்தவன். ஏனெனில் அவனுக்கு ஆறறிவுகளில் ஒன்றான பகுத்தறிவு என்ற மெய்யறிவு உண்டு. இதனையே தொல்காப்பியர் அவர்கள் இவ்வாறு கூறிகின்றார். " மக்கள் தாமே ஆறறிவுயிரே யாவும் மாக்களும் ஐயறிவினவே" இந்த பகுத்தறிவால்தான் மனிதனால் நல்லது எது ? கெட்டது எது? என பகுத்தறிந்து தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வாழப் பழகிக்கொள்கிறான். இத்தகைய உயர்ந்த மனிதப்பிறப்பினுள் தமிழினம் என்றும் தனித்துவமானது.அதனால்தான் போல் ஒரு அறிஞன் கூறினான் " தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு பண்புண்டு" என்று. ஔவையாரோ " அரிது அரிது மானுடராதல் அரிது" என்றார். அப்பர் சுவாமிகளோ " வாய்த்தது தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்" என்றார்.அத்துடன் மீண்டும் "இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே" என்றார். திருமூலநாயனாரும் திருமந்திரத்திலே மனிதப்பிறவியின் மாண்பு பற்றி நயம்படக் கூறியுள்ளார்.


எனவே பெறுதற்கரிய பிறவியை பெற்ற நாம் எமக்கும் பிறார்க்கும் சமூகத்திற்கும் பயன்பட வாழ்ந்து எம் பண்பாட்டை பேண வேண்டும். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுலகத்தில் தெய்வத்தில் வைக்கப்படும்" என்று வள்ளுவர் பெருந்தகை கூறியுள்ளார். அறம் , பொருள் , இன்பம், வீடுபேறு இவற்றை தனது முப்பால்களில் மிக அழகாக கூறியுள்ளார். ஏனைய தமிழ் நூல்களும் இதனையே வலியுறுத்துகின்றன. திருக்குறளை யாத்த திருவள்ளுவர் அறம் , பொருள் இன்பவழி நின்று அவற்றின் துணையால் ஈற்றில் வீடுபேற்றையும் பெறலாம் என்று தனது குறள்களில் கூறியுள்ளார். அறவழி நின்று தன்னைப்பேணி மாதா, பிதா, குரு, பெரியோர், அறிவோர் என்போர்க்கு உறுதுணையாய் வாழ்வது தமிழர் பண்பாடாகும். அதுமட்டுமன்றி பொய்யாமை, கள்ளாமை, கொல்லாமை என்று சொல்லப்படுபவற்றை தவிர்த்து வாழப்பழகியமை தமிழர் பண்பாடாகும். அத்துடன் நடை உடை பாவனை என்பவற்றையும் ஒரு பண்பாடகக் கொண்டு வாழ்வது தமிழர் சமுதாயம். "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற பரந்த மனப்பான்மையுடன் யாவரையும் கேளீர் ஆக்கிக் கொண்டு வாழ்வது தமிழர் பண்பாடு. இவ்வாறு தமிழர் பண்பாட்டைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.


பல்லோர் போற்றப்பண்புடன் வாழ்ந்த எமது சமுதாயம் நாட்டில் ஏற்பட்ட கொடுங்கோண்மையால் பிறந்தகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் சென்று வாழும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு மேலைத்தேசங்களுக்கு இசைய வாழும் நிலை ஏற்பட்டாலும், தமிழர் பண்பாடு மாறுபடாது அமையவேண்டும். ஒர் இனத்தின் பண்பாட்டை அந்த இனத்தின் இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். பண்பாடு என்பது உலக மக்களிடையே மொழி, பழக்கவழக்கம், சூழல் அடிப்படையிலே வேறுபடுகின்றது என்பதை நாம் அறிவோம். இலக்கியம் என்பது முடிந்த கொள்கைகளையும் முதிர்ந்த கொள்கைகளையும் கொண்டு திகழ்வதாகும். மனிதனை மிருகத்திலிருந்து வித்தியாசப்படித்திக் காட்டுவது பண்பாடு. திரை கடல் ஓடியும் திரவியம் தேடிய தமிழர் அன்றும் தம் பண்பாட்டை மறந்திலர். இன்று எம்மவரிற் சிலர் புலம்பெயர்ந்த நாட்டில் தாய் மொழியாம் தமிழை மறந்து , பண்பாடான உடையைத் துறந்து, தம் ஊண் பெருக்கத்திற்கு தம் பிறிது ஊண் உண்டு கோயில் வழிபாடினின்றும் நீங்கி, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்வதை காணக்கூடியதாக இருக்கின்றது


அறிந்த கருத்துக்களையும், உணர்ந்த உணர்வுகளையும் அளந்து உரைப்பதற்கு பயன்படும் கருவியே மொழியாகும். உலக மொழிகளிலே முதல் பத்து மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாக அமைந்துள்ளது. தமிழ் மிகவும் பழமை வாய்ந்த மொழி. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வரலாறு படைத்த இனம் நம் தமிழினம். ஆரியர், போர்த்துக்கேயர் எனப் பலரது ஆதிக்கத்தையும் எதிர்த்து நிலை நின்று வளர்ந்து வரும் மொழி. திருக்குறள் பல மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டது. "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" தான் அறிந்த மொழிகளில் தமிழ் இனிமையானது என்ற புரட்சிக்கவி பாரதியின் முழக்கம் அன்றே தமிழின் தனிச்சிறப்பு. இத்தகைய சிறப்பு பொருந்திய தமிழ்மொழியை, தமிழ் சிறார்களில் சிலர் மறந்தும், கல்லாதும் ஆங்கிலத்தையே தமது பேச்சு மொழியாக்கிக் கொண்டுள்மையும் பெரிதும் வருந்தத்தக்கது. இதற்கு அவர்களின் பெற்றோர்களும் துணைபுரிவது மிகவும் வேதனையான செயலாகும். அவர்கள் பாடசாலகளிலின்றி வீடுகளிலும் ஆங்கிலத்தையே உரையாடுகின்றனர். அதையே மரியாதையாகக் கருதி தமிழில் பேசத் தயங்குகிறார்கள். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு பேருந்து வண்டியில் பயணம் செய்யும் போது அவதானித்தீர்களாயின், அங்கு பலதரப்பட்ட மக்கள் பயண ப்பர். ஆனால் அவர்கள் தங்களது நண்பர்கள் உறவினர்களுடன் தமது சொந்த மொழியிலே உரையாடுவார்கள். ஆனால் எமது இனத்தவர்கள்தான் சொந்த மொழி தவிர்த்து ஏனைய மோழியில் உரையாடுவார்கள். இவ்வாறு எமது புலம் பெயர்ந்த மக்கள் எமது பண்பாடுகள் , மொழி என்பவற்றை மறந்து அந்நிய பண்பாட்டை பின்பற்றினால் எதிர்காலத்தில் தமிழினம் என்ற தகுதியையே இழந்து விடுவர்.


தொடக்கமோ முடிவோ இல்லாத இந்த தமிழ்மொழியையும் , கலாச்சாரத்தையும் இன்று நாங்கள் உதாசீனம் செய்வதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் என்ன நன்மையை பெறுகின்றோம். எமது சமூகச் சீர்கேடு வரக்காரணம் மொழிப்பற்றின்மை, கலாச்சாரத்தை தகுந்த முறைப்படி பேணிப்பாதுகாக்காமை, வாழ்க்கைமுறை என்பனவாகும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை இன்று வரை புலம்பெயர் நாடுகளில் (கனடா) காணமுடியவில்லை. எங்கு பார்த்தாலும் பொய் , பித்தலாட்டம், சண்டை , பூசல்களாக இருக்கின்றது. ஒரு நாய் குரைத்தால் பல நாய் குரைக்கும் என்பது முது மொழி. ம்ம்ம்ம்... இதுவும் இங்கு சாத்தியமற்றது. ஏனெனில் நேரமின்மை. ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கல்வி செல்வம் மட்டும் இருந்தால் போதாது. அவனுக்கு மொழிப்பற்றும், கலாச்சாரத்தின் மகிமையும் விளங்க வேண்டும். இல்லையெனில் மண்தோண்டி புதைக்க வேண்டும். கனடா வாழ் ஒரு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்வியை கற்று வருவது மட்டுமன்றி மேல்நாட்டவர்களின் பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் பெரியவர்களாகி பெருமையோடு வாழ்வார்கள் என நினைக்கிறார்கள். அதன்மூலம் தாங்களும் பெருமைப்படுகின்றார்கள். எமது தாய் மொழியாகிய தமிழை மறந்துவிடக்கூடாதவாறு அதனைக்கற்றல் வேண்டும். எம்மவர்க்கு பெருமை சேர்ப்பது தாய்மொழியும், கலாச்சாரமும் ஆகும். அதுவே எமது தனித்தன்மையை உலகில் எடுத்தியம்ப வல்லது. 'நாம் யார், எமது அடையாளம் என்ன? எமது வரலாறு என்ன? எமது முகவி என்ன?' என்பதை ஏனைய மக்களுக்கு எடுததியம்பி எம்மையும் மரியதைக்குரிய இனமாக காட்ட உதவுவது எமது மொழியும் பண்பாடுமேயன்றி, வேறொன்றுமில்லை. இதனை அவர்கள் புரிந்து கொண்டு பிள்ளைகளுக்கு புத்திமதியையும் நல்லொழுக்கங்களையும் கற்பித்து அவர்களின் வாழ்க்கையை சிறப்புற வழி நடத்த வேண்டும். எத்தனையோ தமிழ் மக்கள் இன்று கனடாவில் கல்வித் துறையிலும் , கலாச்சாரம் மொழித்துறையிலும் பல முன்னேற்ற சாதனைகளை நிலைநாட்டிக்கொண்டிருக்கின்றனர்.


அடுத்து இளைஞர்களை நோக்குவோமாயின் இங்கு கூடுதலான இளைஞர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீதிகளிலும் , வியாபாரநிலையங்களிலும் , சினிமாகொட்டகைகளிலும் செலவிடுகின்றனர். இவர்கள் நம் தாய் நாட்டு இன்னல்களை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். எம்மைப் போன்ற இளைஞர்கள் சின்னஞ்சிறிசுகள், வயோதிபர்கள் எல்லோரும் எவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் தமது பணத்தை வீணான முறையில் செலவு செய்யாது நம் நாட்டு மக்கள் நலன் கருதி நாடாத்தப்படும் கலை நிகழ்வுகளுக்கு தங்களாலன உதவிகளைச் செய்ய வேண்டும். ஏன் என்றால் தாயகத்தில் அல்லலுறுபவர்களும் எம்மவர்கள்தான். அவர்கள் எமது தாயக மண்ணிற்காக தம் உயிரையே துச்சமென மதித்து எந்நேரத்திலும் களத்திலே இறங்கி எதிரிகளை விரட்டியடிக்க முயலுகின்றனர். அத்தகைய நாட்டுபற்றாளர்களை நாம் மதித்தல் வேண்டும் தமிழெரெனக் கொண்டு வாழ்வோரை " பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு நாமமது தமிழிரெனக் கொண்டு இங்கு வாழ்ந்துடுதல் நன்றே??' எனப் பரிகசிக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும்.


எனவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எம்மவர் நம் பண்டைய பண்பாடுகளை போற்றி, தாய் மொழியாம் கன்னித்தமிழை கண்ணெனக் கொண்டு தம் வழித்தோன்றல்களையும் அற நெறியில் நிறுத்தி வாழ் வேண்டும். " தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்ற பாரதியின் வீர முழக்கம் கேட்டு தமிழரே விழித்தெழுங்கள். தமிழ்மொழியையும் வருங்காலத்தில் ஒரு மொழியாக்கி தேமதிரை தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவை பூர்த்தியாக்க்குங்கள். தமிழ் வெண்ணெய் உருக்கி நெய்யாக்கி விளக்கேற்றி தமிழ் ஒளி தமிழனுக்கு மட்டுமல்ல தரணியெங்கும் பரவும் வகையில் செய்தல் வேண்டும். தமிழர்கள் ஆங்கிலேயர் போல் உடுத்து , உண்டு, குடித்தாலும் கூட ஆங்கிலேயராக முடியாது. நாம் தமிழர் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும். நம் வருங்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக திகழவேண்டும்.

Thursday, March 16, 2006

வணக்கம் எல்லோருக்கும்!

இந்த இரசிகையின் குடிலுக்கு வருகை தந்த அனைவருக்கும் என்ர முதல் கண் நன்றியைத் தெரிவித்து கொள்ளுறன். வாருங்கோ எல்லோரும் ஒரு ரீ போடுறன் குடிச்சுட்டு உங்கட கருத்தை சொல்லிட்டு போங்கோ.இந்த இரசிகை ஏன் இதை இரசிகை இரசித்தவை என ஆரம்பிச்சு இருக்கிறா என உங்களுக்கு மண்டை வெடிக்குதா? பெருசா ஒன்றும் இல்லை இந்த வெளிநாட்டு வாழ்க்கைல நான் இரசித்த பழைய புதிய நினைவுகளுடன் என்னை பாதிச்ச விடயங்களையும், உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்குறன்.