இரசிகை-இரசித்தவை

Monday, September 04, 2006

தாயகப்பறவைகளுக்கா எழுதிய தாயகவலம்

http://www.thayakaparavaikal.com/August-thayakavalam.html

தாயகவலம் - வட்டுக்கோட்டை

யாழ் மாவட்டத்தின் வலிகாமம் மேற்கில் உள்ள வட்டுக்கோட்டை என்னும் ஊர் பற்றி இன்றைய தாயகவலம் கூறப்போகிறது.

வட்டுக்கோட்டைக்கு வழி எது என்று கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்று சொல்லுவார்கள். வட்டுக்கோட்டை என்ற உடனே அப்பழமொழி தான் ஞாபகம் வருகிறது. மனிதவாழ்விற்கு அத்தியாவசியமான அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டமைந்த வட்டுக்கோட்டை; குடியிருப்பு நிலம், வயல் நிலம், கடல் மூன்றையும் தன்னகத்தே கொண்ட ஊர்.

இங்கு 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி பரவாலகப் பேசப்படும் வட்டுக்கோட்டைத்தீர்மானம் தமிழர் கூட்டணி கட்சியால் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானத்தில் இலங்கையில் தமிழ்த்தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ளவதற்காக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திர இறைமையுள்ள, மதச் சார்பற்ற சோசலிசத் தமிழீழ நாட்டை மீள்விக்க வேண்டுமெனப் பிரகடனம் செய்தது குறிப்பிடத்தக்கமை.
வட்டுக்கோட்டை என்னும் போது வட்டுவடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என உள்ளடக்கிய ஒரு பெரிய பிரதேசத்தையே குறிக்கிறது. சங்கரத்தை சித்தங்கேணி, அராலி, சுழிபுரம், கொட்டைக்காடு, மூளாய், சங்கானை, தொல்புரம் போன்ற ஊர்கள் அருகில் அமைந்திருக்கின்றன. வட்டுக்கோட்டை வைத்தியசாலை, மூளாய் வைத்தியசாலை, கொட்டைக்காட்டு வைத்தியசாலை என்பன இவ்வூரில் பிரபலமான வைத்தியசாலைகள் ஆகும்.


யாழ்ப்பாணக்கல்லூரி முன்பக்க்கம்
யாழ்ப்பாணக்கல்லூரியின் இணையத்தளம் http://www.jaffnacollege.org/

ஆரம்ப காலங்களில் கிறிஷ்தவமிஷனால் நாடாத்தப்பட்ட வட்டுக்கோட்டை செமினறி மிகவும் பிரபல்யமான ஒரு கல்விக்கூடம் ஆகும். அங்குதான் பல கல்விமானகள் தங்கள் ஆரம்பக் கல்வியைக் கற்றார்கள். இவ்வூர் பல படித்த அறிஞர்கள் வாழ்ந ஊர் என்னும் பெருமை பெற்றது. வில்லியம் நெவின்ஸ் அல்லது நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை எனப் பரவலாக அறியப்பட்ட முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தின் கல்வித்துறையில் அறியப்பட்ட ஒருவராக இருந்தார். அவர் தனது ஆரம்பக்கல்வியை தனது 12 வயதில் வட்டுக்கோட்டை செமனறியில் கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களும் தனது பன்னிரண்டாவது வயதில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கிய வட்டுக்கோட்டை செமினறியில் சேர்ந்து, அறிவியல் துறையிலும் பயிற்சி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல கல்விமான்களை வளர்த்துவிட்ட பெருமை வட்டுக்கோட்டையையே சேரும். தற்போதைய காலங்களில் ஆண்டு 1 முதல் 12 வரையிலான வகுப்புக்களை உள்ளடக்கிய மகாவித்தியாலையங்கள் கல்லூரிகள் அயலில் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் போன்றவை அமைந்ததோடு வட்டு இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணக்கல்லூரி, விக்டோரியாக்கல்லூரி போன்றன மிகவும் பிரபல்யமான கல்லூரிகள் ஆகும். மற்றும் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வாசிகசாலை என இவ்வூர் கல்வி கற்பதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மதம் என்று பார்க்கையில் இங்கு பொதுவாக இந்துமதத்தை வழிபடும் மக்கள் குறிப்பாக சைவசமயத்தவர் தான் அதிகம் என்று கூறினாலும் வேறு மத மக்களும் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணகி அம்மன் கோவில், துரட்டிப்பனை அம்மன் கோவில் அடைக்கலம்தோட்டம் கந்தசுவாமி கோவில், பத்திரகாளிகோவில், சிவன்கோவில், என்பன மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஆகும் அத்துடன் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு கோவில்கள் உள்ளன. கண்ணகி அம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் இக் கோவிலில் இன்றும் அப் பழைய கட்டிடமே உள்ளது. அதனை புனரமைக்கும் வேலைகள் தற்போது நடந்து கொண்டிருப்பதாக அறியப்படுகிறது, மற்றும் பத்திராகாளி அம்மன் கோவிலும் மிகவும் தொன்மை வாய்ந்தது இங்கு பழைய காலங்களில் தீர்த்த திருவிழா அன்று ஆடு அடித்து கறி சமைத்து அன்னதானம் வழங்குவது வழக்கமாக இருந்தது ஆனால் தற்போழுது அவ்வழக்கம் வழக்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை என்னும் ஊரில் பலதரப்பட்ட தொழில் செய்யும் மக்கள் வாழ்ந்தாலும் முக்கிய தொழில் விவசாயமாக காணப்படுகிறது. வாழும் நாளில் பல நாட்களை பட்டினியில் போக்கும் சில ஏழை மக்களும் இல்லாமலும் இல்லை. இவ்வூரில் பல்வேறு குழுக்களாக பிரிந்த மக்கள் சாதியம் பார்த்து நீ பெரிது நான் பெரிது என்று ஏட்டிக்குப் போட்டியாக செயற்படுவதும், சண்டைபோடுவதும் குறைவின்றியே இருந்தது. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தின் பின்னர் இந்தப் பிரிவினைகள் எவ்வளவோ குறைந்திருந்தாலும் கூட இன்னும் சாதியம் என்னும் மரக்கொப்பில் ஏறி அமர்ந்திருக்கும் சிலர் இல்லாமல் இல்லை.
இந்திய இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பில் சிக்குண்ட ஊர்களில் வட்டுக்கோட்டையும் ஒன்றே. இந்திய இராணுவ காலங்களில் பெரிதாக பாதிப்புக்களை எதிர் கொள்ளாவிட்டாலும் ஏனைய ஊர்களில் போல் இங்கும் ஆட்களைப் பிடித்தல் அடித்தல் போன்றன சாதாரனமாக நடந்தவையே. வட்டுக்கோட்டையில் உள்ள மக்கள் முதன் முதலாக முன்னேறிப்பாச்சல் தாக்குதலின் போதே 1995 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முதல் எங்கு பிரச்சினை என்றாலும் இவ்வூர் மக்கள் தங்கள் ஊரை விட்டு எங்கும் செல்லவில்லை.

பாரிய அளவில் வசதிகள் அற்ற நிலையிலும் வட்டுக்கோட்டை என்னும் இவ்வூர் எல்லாவகையிலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது. ஈழத்தமிழரின் அரசியலைப் பொறுத்தவரையில் திருப்பு முனையாக அமைந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தால், வட்டுக்கோட்டை என்ற பெயர் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஒரு தனித்துவமாகத் திகழும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

9 Comments:

  • At Thursday, September 07, 2006, Blogger U.P.Tharsan said…

    சிறுவயதில் நான் ஓடியாடி விளையாடிய ஊரின் காட்சிகள் மட்டுமே என் கண்ணுக்குள் இருந்தன. இன்று தகவல்களையும் அறிந்துகொண்டேன். நன்றி ரசிகை.

     
  • At Wednesday, September 20, 2006, Blogger Rasikai said…

    ஆகா அப்போ நீங்கள் வட்டுக்கோட்டையா??
    வட்டுக்கோட்டை எவ்விடம்???
    ம்ம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தர்சன்

     
  • At Friday, December 08, 2006, Blogger கானா பிரபா said…

    ஊரைப் பற்றி நல்ல பதிவு ரசிகை

     
  • At Wednesday, December 13, 2006, Blogger Rasikai said…

    கானபிரபா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

     
  • At Wednesday, December 13, 2006, Blogger பகீ said…

    நீங்க யாழ்ப்பாணக்கல்லூரியல எந்த பச். நீங்க கேட்டபடியாத்தான் நானும் கேட்டனான்.

    ஊரோடி பகீ

     
  • At Wednesday, December 13, 2006, Blogger பகீ said…

    இந்த மறமொழியையும் ஒருக்கா மட்டறுத்து விடுங்கோ என்ன.....

     
  • At Wednesday, December 27, 2006, Blogger Rasikai said…

    வணக்கம் பகீ
    ம்ம் நான் யாழ்ப்பாணக்கல்லூரில படிக்கலை வட்டுஇந்துக்கல்லூரில தான் படித்தேன் ஆனால் யாழ்ப்பாணக்கல்லூரில நிறைய நண்பர்கள் இருந்தார்கள் அதனால்த்தான் கேட்டேன்

     
  • At Saturday, May 17, 2008, Blogger U.P.Tharsan said…

    அட நீங்கள் 2006 ஆண்டு எழுதிய பதிவில் கேட்ட கேள்வியையே நான் இன்றுதான் பார்க்கிறேன்.

    எனக்கு அவ்வளவாக வட்டுகோட்டை பற்றிய ஞாபகங்கள் இல்லை. எனினும் நாங்கள் இருந்த இடத்தை "மாவடி" என்று சொல்லுவார்கள். நான் 1-5 ஆண்டுவரை அங்கே இருக்கிற சுப்ரமணிய வித்தியாசாலை என்கிற பாடசாலையிலும். 6 வகுப்பு வட்டுஇந்து கல்லூரியிலும் படித்தேன்.(3,4மாதம் மட்டுமே)

    எனினும் என்னுடைய மாமாவுடன் வட்டு இந்து கல்லூரியில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளை சிறுவயது முதலே பார்க்க வருவதுண்டு.

    சிறிது சிறிதாக நிறைய ஞாபகங்கள்... ஒரு பதிவே போடலாம் :-)) )

     
  • At Thursday, July 31, 2008, Blogger Rasikai said…

    ஆகா உங்கட பதிலை இண்டைக்குத்தான் பார்த்தனான். ஆகா நாங்கள் இருந்த இடமும் மாவடி தான். நான் ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 5 வரை வட்டு இந்துக்கல்லூரியின் ஆரம்ப பாடசாலையிலும் மிகுதி ஆண்டு 6 தொடக்கம் ஆண்டு 9 வரை வட்டு இந்துக்கல்லூரியிலும் கல்வி கற்றேன்.

    ஆகா உங்கட சின்ன ஞாபகங்களைப் பதிவாப் போடுங்கோ. வாசிக்க ஆவல்.

     

Post a Comment

<< Home