இரசிகை-இரசித்தவை

Thursday, May 17, 2007

உலகத் தமிழர்கள் குற்றவாளிகளா?

வாதப் பிரதிவாதங்களை வாசிக்க
http://www.yarl.com/forum3/index.php?showtopic=20889&st=0


எனது தீர்ப்பு

எல்லோருக்கும் எனது வணக்கம்

யாழ் இணையத்தின் 9 அகவையை முன்னிட்டு இந்தச் சிறப்புப் பட்டிமன்றம் மப்பிள்ளை அவர்களால் ஒருங்கமைக்கட்டு இனிதே நடந்தேறியது. இந்தப்பட்டிமன்றத்தில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றியைக் கூறுக்கொள்வதோடு இதனை சிறப்புற ஒழுங்கு செய்த மாப்பிள்ளைக்கு நன்றுகளும் பாராட்டுக்களும்.அத்துடன் யாழ் இணையத்தின் ஒன்பதாவது அகவையில் யாழ் இணையத்தையும், அதன் நிர்வாகத்தையும், கள உறவுகளையும் மனதாற வாழ்த்திக் கொண்டு விவாவத்துக்கு செல்வோம்.

உலகத் தமிழர்கள் குற்றவாளிகளா?

தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?என்ற தலைப்பிலே உலகத் தமிழர்கள் குற்றவாளிகள் என்றும் சுற்றவாளிகள் என்றும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இங்கே முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அடிப்படையாக வைத்து என்னுடைய தீர்ப்பை முன்வைக்கிறேன்.

அதற்கு முன்பதாக தனிநபர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒரு சமூகத்தைக் குற்றஞ் சாட்ட முடியாது என்பதால் இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற கருத்து நீதிமன்றத்திலே முன்வைக்கப்பட்டிருந்தது.ஆனால் தனிநபர்கள் சேர்ந்ததே சமுதாயம் என்றும், அந்தச் சமூகத்தில் அங்கம் வகிக்கின்ற பெரும்பான்மையானோரின் செயற்பாடுகளுக்கு அந்தச் சமூகம் பொறுப்பெற்றே ஆக வேண்டும் என்றும் இந்த நீதிமன்றம் கருதுவதால் மேற்படி கோரிக்கை முழுமையாக நிராகரிக்கப்படுகிறது.

இனி வாதப் பிரதிவாதங்களை எடுத்து நோக்குவோம்முதலாவதாக ஈழத் தமிழர்கள் குற்றவாளிகளே என்று வாதிட்டவர்கள் பின்வரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்கள்

குற்றச்சாட்டு 1

ஈழத்தில் தமிழர்கள் படும் அவலங்களையும் ஈழத் தமிழர்களுக்குக் காலங் காலமாக இழைக்கப்பட்ட அநீதிகளையும் சர்வதேச அளவில் எடுத்துச் சொல்லப் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

குற்றச்சாட்டு 2

தாயகத்தில் அவலங்களை நேரடியாகச் சந்தித்துவிட்டு வந்தவர்களாய் இருந்த போதும் புலம்பெயர்ந்த சில காலங்களிலேயே அவை அனைத்தையும் மறந்து களியாட்டங்களிலும் விருந்துபசாரங்களிலும் மூழ்கிவிட்டனர்

குற்றச்சாட்டு 3

இங்கே பொருளாதார ரீதியில் வளமாக இருந்த போதிலும் தாயத்திற்கு பொருளாதார ரீதியாக போதிய அளவில் உதவவில்லை

குற்றச்சாட்டு 4

தாயக அவலங்களை ஒரு செய்தியாக மட்டுமே பார்த்துவிட்டு அமைதியாகி விடுகின்றனர்

குற்றச்சாட்டு 5

எமது கலைப்படைப்புக்களைப் புறக்கணித்து அன்னியக் கலைஞர்களின் பின்னால் அலைகின்றனர்

குற்றச்சாட்டு 6

தாய்மொழியாம் தமிழை தமது பிள்ளைகளுக்கு படிப்பிக்க மறந்து விட்டனர்

குற்றச்சாட்டு 7

ஈழத்தமிழர்கள் என்ற பதத்தைப் பாவிப்பதைக் கூட விரும்பாதவர்களாக இருக்கின்றனர்.

குற்றச்சாட்டு 8

ஊடகங்கள் தேசிய நலன்சார்ந்த தேசியப் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருகின்ற நிகழ்ச்சிகளை விடுத்து வியாபார நோக்கத்தோடு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன.

குற்றச்சாட்டு 9

பொது அமைப்புகள் ஆலயங்கள் என்பன சமூக நலன் சார்ந்த தாயகத் தமிழர்களுக்கு பிரயோசமான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆடம்பரத்தையே முதன்மையாகக் கொண்டு செயற்படுகின்றன.

குற்றச்சாட்டு 10

விளையாட்டு நிகழ்வுகளில் சிங்கள அணிகளை ஆதரித்துச் செயற்படுவதன் மூலம் எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகின்றனர்

குற்றச்சாட்டு 11

சிங்கள தேசத்துப் பொருட்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சிங்களத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறார்கள்.

பிரதானமாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் அவர்கள் சுற்றவாளிகள் என்று வலியுறுத்தும் விதமாகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றை இங்கே ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் தொடர்பு படுத்தி பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

குற்றச்சாட்டு 1 இற்குப் (ஈழத்தில் தமிழர்கள் படும் அவலங்களையும் ஈழத் தமிழர்களுக்குக் காலங் காலமாக இழைக்கப்பட்ட அநீதிகளையும் சர்வதேச அளவில் எடுத்துச் சொல்லப் பொதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை) பதிலளிக்கும் விதமாக -ஆர்பாட்டங்கள் ஊர்வலங்கள் என்பவற்றை நடத்தி எமது நிலையை சர்வதேசத்திற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறோம்-வேலைப்பளு, வேகமான வாழ்க்கை முறை என்பவற்றின் காரணமாக பலரால் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியவில்லை-வெளிநாடுகளில் அந்த அந்த நாட்டு சட்ட திட்டங்களின் அடிப்படையிலேயே செயற்பட முடியும். அதனால் நினைத்தபடி போராட்டங்களைச் செய்ய முடியாது. ஒரு வரையறைக்குள்ளேயே செயற்பட முடியும்போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.பினவரும் கருத்துக்களை ஆராய்கின்ற போது :எமது நாட்டு நிலமையை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும் சிங்களத்தின் அராஜக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பல ஆர்ப்பாட்டங்கள் கூட்டங்கள் என்பன நடத்தப்பட்டு வருவது உண்மையே. அதிலும் அண்மைக்காலமாக இத்தகைய நிகழ்வுகள் அதிக அளவில் இடம்பெறுகிறது என்பதும் உண்மையே. ஆனால் இவை போதுமானது என்று இந்த நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அதுமட்டுமன்றி இந்த நிகழ்வுகளில் 10 இற்கும் குறைவானவர்களே கலந்து கொள்கின்றனர்.வேலைப்பளு காரணமாக இத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்று சாட்டுச் சொல்பவர்களை மன்னிக்கவே முடியவில்லை. காரணம் தாயகத்திலே எங்களது சகோதரர்கள் சிங்கள இராணுவத்தினது துப்பாக்கிகளுக்கு முன்னால் அவர்களது அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது கடையடைப்புகள் ஆர்ப்பாட்டங்கள் என்று போராடி வருகின்றனர். இதன் காரணமாக தமது உயிர்களைக் கூடப் பறிகொடுத்தவர்கள் ஏராளம் பேர் இருக்கும் போது நாம் எமது ஒருநாள் வேலையைக் கூடத் தியாகம் செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம் என்று சொல்வது வெட்கக் கேடானதுஅடுத்ததாக வெளிநாட்டுச் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட முடியும் அதனால் பல போராட்டங்களையும் நடத்த முடியவில்லை என்பதும் வலுவற்ற வாதமே. காரணம் இந்த நாடுகளில் தனிமனிதனின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் என்பவற்றை நடத்துவதற்குப் பல சந்தர்ப்பங்கள் இருக்கிறது. அந்தச் சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பாவிக்கவில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகின்றது.

குற்றச்சாட்டு 2 இற்குப் (தாயகத்தில் அவலங்களை நேரடியாகச் சந்தித்துவிட்டு வந்தவர்களாய் இருந்த போதும் புலம்பெயர்ந்த சில காலங்களிலேயே அவை அனைத்தையும் மறந்து களியாட்டங்களிலும் விருந்தபசாரங்களிலும் மூழ்கிவிட்டனர்)பதிலளிக்கும் விதமாக பின்வரும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.- இந்த நாட்டில் காலூன்றி விட்ட தமிழர்களில் பலரும் தாயகத்துக்குத் திரும்பப் போவதில்லை. - இந்த நாட்டில் வாழ்கின்ற போது இந்த நாட்டு மக்களைப் போன்ற வாழ்க்கைமுறையையே வாழ வேண்டியவர்களாக இருக்கிறோம்.மேற்படி கருத்துகளைக் கூட ஏற்றுக் கொள்ளப்பட முடியாத வாதங்களாகவே இந்த நீதிமன்றம் கருதுகிறது.

காலம் காலமாக நாம் நாடு கடந்து வாழ்ந்தாலும் இனிமேல் எமது தாய்நாட்டுக்கு மீளப் போவது இல்லை என்றாலும் கூட எமது தாயகத்தை மறப்பதானது பெற்ற தாயையே மறப்பதற்குச் சமமானது.உலக வரலாற்றை நோக்கினால் ‘இஸ்ரேல்’ என்ற நாடு உருவாக வேண்டும் என்பதற்காக உலகின் பல நாடுகளிலும் தங்களை ஸ்திரப்படுத்தி வாழ்ந்த யூதர்கள் ஆற்றிய பங்கை யாரும் மறப்பதற்கில்லை. அதுமட்டுமன்றி அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளில் பெரும் பதவிகளில் ஆடம்பர வசதிகளுடன் வாழ்ந்தவர்கள் கூட தங்கள் பதவிகளைத் தூக்கியெறிந்து விட்டு தமது நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக தாயகம் திரும்பியது வரலாறு.

குற்றச்சாட்டு 3 இற்கு (இங்கே பொருளாதார ரீதியில் வளமாக இருந்த போதிலும் தாயத்திற்கு பொருளாதார ரீதியாக பொதிய அளவில் உதவவில்லை) பதிலளிக்கும் விதமாக - பல கஷ்டங்களுக்கும் கடன் தொல்லைகளுக்கும் மத்தியிலும் தாயகத்திற்கு எம்மாலான பொருளுதவியை செய்து கொண்டே வருகிறோம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. உண்மையிலே ஈழப் போராட்டத்திற்கு அவசியமான பொருளாதார பலத்தை வழங்குவதில் உலகத் தமிழர்களின் பங்களிப்பே பிரதானமானதாகும். சர்வதேச நாடுகள் பலவும் போட்டி போட்டுக் கொண்டு வழங்கும் இராணுவ உபகரணங்களைக் கொண்டு போராடும் சிறிலங்கா இராணுவத்திற்கு இணையாகப் போராடுவதற்குத் தேவையான ஆயத ரீதியிலான பலத்தைப் பெறுவதற்கு உலகத் தமிழர்களே பெரும் பங்களிப்புச் செய்கின்றனர் என்பதே உண்மையாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு குற்றச்சாட்டு 3 இல் இருந்து உலகத் தமிழர்களை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது.

இதைத் தவிர உலகத் தமிழர்கள் சுற்றவாளிகள் என்ற கருத்துக்கு வலுச் சேர்க்கும் விதமாய் - மலரப் போகும் தமிழீழத்தை தோளில் தாங்கி வளர்த்தெடுக்க இருப்பவர்கள் உலகத் தமிழரே- தமிழ் தெரியாவிட்டாலும் கூட எமது ஊர்வலங்களுக்கு தோள் தரும் பல இளைஞர்கள் உள்ளனர் போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.இவற்றுள் ‘மலரப் போகும் தமிழீழத்தை தோளில் தாங்கி வளர்த்தெடுக்க இருப்பவர்கள் உலகத் தமிழரே’என்ற கூற்றில் அறிவியல் துறைசார்ந்து சற்றே உண்மை இருக்கிறது என்ற போதிலும் கலாச்சார பண்பாட்டு ரீதியாக இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்பது இந்த நீதிமன்றத்தின் அபிப்பிராயமாகும்.

அதைவிட தமிழ் தெரியாத ஒரு சமூகத்தை உருவாக்கியது கூட தமிழர்கள் குற்றவாளிகள் என்ற கருத்துக்கே வலுச் சேர்க்கிறது. தாயக மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு இருந்த போதிலும் மொழியறிவு இல்லாத காரணத்தால் உதவி செய்வதில் இருக்கும் தடைகளை சங்கடங்களை ‘சுனாமி’ தாக்கத்திற்கு உள்ளான மக்களுக்கு உதவி செய்யச் சென்ற எம் இளைஞர் யுவதிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இதைத்தவிர உலகத்தமிழர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் 4 5 6 7 8 9 10 11 என்பவற்றை மறுத்துரைக்கின்ற பொருத்தமான கருத்துக்கள் எதுவும் இந்த நீதிமன்றத்திலே முன்வைக்கப்படவில்லை. எனவே நீதிமன்றத்திலே வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களை மட்டுமே கருத்தில் கொண்டு உலகத் தமிழர்களை பொருளாதார ரீதியாக போதிய உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு 3 இல் இருந்து விடுவிக்கின்ற போதிலும் ஏனைய பத்து விடயங்களிலும் உலகத் தமிழர்கள் குற்றவாளிகளே என்று இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

‘தண்டனை என்பது திருந்துவதற்காகவே’ என்பதால் இதுவரை செய்த குற்றங்களுக்குப் பிராயசித்தம் செய்யும் வகையில் ஈழத்தமிழரின் விடிவிற்காக தமது அனைத்து வளங்களையும் பாவித்து முழுமையாக உழைக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் தீர்ப்பளித்து இந்த வழக்கை நிறைவு செய்கிறது.

நன்றி வணக்கம்

0 Comments:

Post a Comment

<< Home