இரசிகை-இரசித்தவை

Friday, July 18, 2008

எனது பார்வையில் காதல்வானம் இசைத்தட்டு வெளியீட்டு விழா!!

வசீகரனின் காதல் வானம் இசைத்தட்டு வெளியீட்டு விழா விற்கு யாழ் உறவுகள் என்றவகையில் அந்நிகழ்விற்கு சமூகம் அளித்து இருந்தோம். அவ் நிகழ்வை பற்றி விமர்சனம்.

மாலை மயங்கும் நேரம். மழைத்தூறல்கள் சிணுங்கி சிணுங்கி நிலத்தை நோக்கி கவி பாடிக் கொண்டிருந்தன. நிகழ்வு சரியாக மாலை 6 மணியளவில் ஆரம்பமாக இருந்தாதல் வேளைக்கு சென்றால் விரைவாக வீடு திரும்பலாம் என்ற நோக்குடன் மண்டபம் நோக்கி விரைந்தோம். பொதுவாக தமிழர்களின் நிகழ்வுகள் எல்லாமே குறித்த நேரத்திற்கு ஆரம்பமாகுவதில்லை என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டு. அந்த அபிப்பிராயத்தை உண்மையாக்கும் விதமாக மண்டபத்திற்குள் நுழைந்தவுடன் வசீகரன் உறவினார் சிலருக்கு அடுத்தாதக நாங்கள் தான் அங்கு நின்றோம். வேற ஆக்கள் ஒருத்தரையும் காணவில்லை. சரி வந்தாச்சு திரும்பிப் போக ஏலாதுதானே என்டு போட்டு வரிசையாக அடுக்கி இருந்த கதிரையில் அமர்ந்தோம். வசீகரன் அந்த விழாவின் நாயகன் விழாவிற்கு ஒழுங்குகளை கவனித்து கொண்டிருந்தார். தனியாக எல்லாவற்றையும் தானாக ஒழுங்கமைத்துக் கொண்டிருக்கையில் எங்களால் உதவி செய்ய முடியாதிருந்தது சிறு கவலையை அளித்தது. அந்த ஒட்டங்களுக்கு இடையிலும் ஒரு மாதிரி எங்களைக் கண்டுபிடித்து சிறு அறிமுகத்துடன் தனது வேலைகளை கவனிக்க தொடங்கி விட்டார். நிகழ்வு இப்போ தொடங்கும் இப்போ தொடங்கும் என்று காத்திருந்தோம். சரியாக மாலை 7:30க்கு தான் நிகழ்வு வசீகரனின் தாயரின் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. (வசீகரன் இனி நடத்தப்போகும் நிகழ்வுகளை என்றாலும் குறித்த நேரத்திற்கு ஆரம்பித்து மற்றவர்களுக்கு முன் மாதிரி இருங்கள்)

சிறுவர்களின் நடன நிகழ்வுகள் மிகவும் அருமையாக இருந்தது. குறிப்பாக வயலின் இசைக்கச்சேரி அளித்த வளரும் கலைஞர்களை பாராட்டமால் இருக்க முடியாது. வயலின் இசையை மிகவும் ரசித்து கொண்டிருந்தவர்களின் கைகளுக்கு சிற்றுண்டிகள் வந்து சேர்ந்தன. அந்த இளம் கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்க முடியமால் எல்லோரும் சிற்றுண்டியை ரசித்து கொண்டிருந்தார்கள். அடுத்து கனடாவில் புகழ் பெற்ற நாடக கலைஞனான கணபதி இரவீந்திரன் வசீகரனின் பாடல்களை விமர்சனம் செய்வதற்காக மேடையேறினார். நல்ல கலைஞனான அவர் வசீகரனின் பாடல்களை முதலே கேட்டு அதற்குரிய விமர்சனத்தை தயாராக்கி கொண்டு வந்திருந்திருந்தால் அவரின் பேச்சு நன்றாக இருந்திருக்கும். மேடையில் நின்றபடியே அவசரமாக பாடல்களை ஒட கேட்டு விமர்சனம் செய்தது கொஞ்சம் சலிப்பாக இருந்தது.

அடுத்து மேடையேறிய பேச்சளார்கள் வசீகரனின் திறமையை மிகவும் போற்றி பேசினார்கள். வசீகரனின் தாத்தாவும் ஓரு தமிழ்ப் புலவர் என்பதையும் நினைவு கூர்ந்தார்கள். அடுத்து இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்வு நடந்தது. வசீகரனின் தாயர் வெளியிட காதல் வானம் இசைத்தட்டின் இசையமைப்பாளாரின் தங்கை முதல் இறுவெட்டை பெற்றார். அடுத்து வந்திருந்தவர்களும் வரிசையாக நின்று இறுவெட்டை பெற்றார்கள். அடுத்து நன்றியுரை கூறுவதற்காக மேடையேறிய விழாவின் நாயகன் வசீகரன் தனக்கு உதவி செய்த எல்லோரையும் நினைவு கூர்ந்தார். இவ் இசைத்தட்டினை வெளியிடுவதற்கு தானும் இசையமைப்பாளாரும் பட்ட கஸ்டங்களையும் நினைவு கூர்ந்தார். எல்லோரும் நன்றி கூறிய வரிசையில் யாழ் உறவுகளையும் நினைவு கூர்ந்து நன்றி கூறியது மிகவும் சிலிர்ப்பாக இருந்தது.

கடைசி நிகழ்வாக ஒரு சில பாடல்களை திரையில் போடப் போகின்றோம் என்று கூறினார்கள். எல்லோருக்கும் பிடித்த யாழ்தேவிப் பாடலையும் பனங்காய்ப் பணியாரப் பாடலையும் பார்க்கும் ஆவலில் நாங்களும் ஆயத்தமானோம். ஆனாலும் தொலைக்காட்சியில் ஏற்பட்ட தொழில் நுட்பம் இடைஞ்சல் கொடுக்க ஒருமாதிரி மடிக்கணணி மூலமாக ஒளிபரப்பத் தொடங்கினார்கள். என்றாலும் நாம் எதிர்பார்த்த பாடல்கள் வருவதாய் இல்லை. நேரம் இரவு 10த் தாண்டிய காரணத்தால் நாங்கள் மண்டபத்தை விட்டு வெளியேறினோம்.

சரி இனி பாடல்களுக்குரிய விமர்சனத்துக்கு வருகின்றேன்.

சாந்துப்பொட்டு வைத்து... என்ற பாடல் ஒரு பெண் தான் ஊரில் செய்த சின்ன சின்ன குறும்புகளை நினைத்து தோழிக்கு வரையும் மடல் போல் அமைந்தது. அருமையான வரிகள் எல்லாமே. மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் வரிகள். என்னை மிகவும் கவர்ந்த பாடலில் இதுவும் ஒன்று. முதல் முதலில் கேட்கும் போது ஒரு இன்பகரமான வாழ்வை இழக்க நேர்ந்திட்டதை எண்ணி கண்கள் குளமாகின. என்னையும் பழைய ஞாபகங்களை மீட்டெடுக்க வைத்தது. ஊருல சாந்துபொட்டு வைச்சு பவுடர் பூசி திரிஞ்ச காலங்கள் பாடசாலைக்கு அணிந்து சென்ற வெள்ளைச் சட்டை பட்டாம் பூச்சிகளாக சிறகடிச்ச பொழுதுகள் மறக்க முடியாதவை. மற்றும் புத்தகங்களுக்கிடையில் ஒளித்து வைத்திருந்த மயிலிறகு குட்டி போடவில்லையே என ஏங்கிய காலங்கள். அத்தனையும் மனத்திரையில் படமாக்கியது இந்த பாடல்கள். கடைசியில் வெள்ளிக்கிழமைகளில் உண்ணும் மரக்கறி சோற்றையும் மறக்கமால் குறிப்பிட்டது ரசிக்க கூடியதாக இருந்தது.

மூங்கில் நிலவென... ஒரு அருமையான காதல் பாடல்.

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்.... என்ற பாடல் ஊரில் இருந்து இடம்பெயர்ந்து பல நாடுகளில் பரந்து வாழ்கிறோம் இல்லையா. பரந்து வாழும் சின்னப்பிள்ளைகளின் பிரச்சினைகளை ஊர் நினைவுகளை மீட்டிச் செல்லும் ஒரு அருமையான பாடல். என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது.

சின்ன சின்ன மழைத்துளி.... என்ற பாடல் காதலுடன் கூடிய மழைக்காலத்தை வர்ணிக்கும் அழகான இனிமையான ஒரு பாடல்.

தை மாசம் பிறந்தாலே.....என்ற பாடல் ஊரை நினைவூட்டும் அருமையான ஒரு பாடல் தான் இதுவும். வருசம் (தை ) பிறந்தாலே வழி பிறக்கும் தைப்பொங்கலை நம்பிக்கையோடு கொண்டாடுவோம் தழிழர்க்கு வழி பிறக்கும் இனி துன்பம் எல்லாம் தொலைந்தது என்ற கருத்தை வலியுறுத்தி அழகாக அமைந்துள்ளது இந்தப்பாடல். எல்லா வரிகளுமே அருமை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

அப்பா என்னும் ஓர் உருவம் என் ஆயுள் முழுவதும் வரும் தெய்வம்... என்ற பாடலை அப்பாக்காக அப்பாவின் முக்க்கியத்துவத்தை அப்பாவினூடான அவரின் உறவை அழகாக எழுதியுள்ளார். அம்மாக்கு எல்லா கவிஞர்களும் நிறைய பாடல்கள் எழுதியுள்ளார்கள். ஆனால் அப்பாக்கான பாடல்கள் ஒரு சிலரே மிகவும் அரிதாக எழுதியுள்ளார். ஆனால் வசீகரன் அப்பாக்கான முக்கியத்துவத்தை கொடுத்து அழகாக அவருக்கும் கவி புனைந்தமை. அவரின் அப்பா பாசத்தை எடுத்துக் காட்டுகிறது.

பள பள பள பார்வைகள்... என்ற பாடல் அழகான இனிமையான அவரின் இளமைக்கால ஆசைகள் எல்லாம் ஒன்று சேர்ந்த கற்பனை நிறைந்த பாடல். நிறையத் தாவணிகளை சைட் அடிச்சு இருக்கிறார் போல...

சின்னமணி அக்கா சின்னமணி வட்டிக்கு காசு தாறிங்களா தை மாசம் எனக்கு கலியாணம் இருக்கு..... என்ற பாடல் ஊர் நினைவை மீட்கும் ஒரு அழகான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஊருல இருக்கிறவை சில பேர் வட்டிக்கு காசு வேண்டி பவுசு காட்டுறவைதானே அதை அழகா கவியாக கொண்டு வந்து அழகான பாடல் ஆக்கியுள்ளார்.

ஒவ்வொரு பாடலா திருப்ப திருப்ப கேட்டன். எல்லாப் பாடலுமே அருமை அருமை அருமை. என்ன காதல் கடிதம் காதல் வானம் என்டு எல்லாம் ஒரே காதல் சம்பந்தமாகதான் எழுதுறாரோ. ஏன் எங்கள் ஈழத்து நிகழ்வுகளையும் எழுதலாமே என்டு மனதில் நினைத்தபடி பாடலைக் கேட்டேன். கேட்ட பின்புதான் புரிந்தது. எனது எண்ணம் தப்பானது எல்லாப் படல்களுமே எம் தாயகத்து நினைவுகள், மற்றும் வாழ்க்கை முறைகளை உள்ளடக்கிய பாடல்கள்தான் என்பது. மொத்தத்துல சிற்சில குறைகள் இருந்தாலும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. வளர்ந்துவரும் இளைஞர்களுக்கு தான் முன்மாதிரியாக இருப்பதோடு அவர்களை ஊக்கப்படுத்தவும் தான் தயங்க மாட்டேன் என்பதை அவரின் கருத்துக்களில் மற்றும் நிகழ்வுகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. இவ்வளவு சிறப்பான கவிஞனை , கலைஞனை யாழ்னூடாக அறிமுகமானதையிட்டு மிக்க மிக்க மகிழ்ச்சி.

சரி எனக்கு எல்லாப் பாடல்களுமே பிடிச்சு இருந்தாலும் ஏனோ தெரியலை இந்தப் பாடலில் ஒரு ஈர்ப்பு இசையா, கவி வரிகளா இல்லை குரலா எதுவென்று தெரியவில்லை. என்னை ஒரே முணு முணுக்க வைத்த வரிகள். இந்தாங்கோ நீங்களும் கேட்டு மகிழுங்கோ சாச்சா நீங்களும் முணு முணுங்கோ.

சின்னமணி சின்ன சின்ன சின்னமணி....

சின்னமணி அக்கா சின்னமணி வட்டிக்கு காசு தாறீங்களா??
தைமாசம் எனக்கு கலியாணம் இருக்கு வட்டிக்கு காசு தாறீங்களா?
காஞ்சிபுரம் சாறி சிங்கப்பூர் தாலி பொம்பிளைக்கு நானும் வாங்க வேணும்..
அளவெட்டி மேளம் அன்னரை நாடகம் கலியாணத்துக்கு நானும் பிடிக்க வேணும்

சின்னமணி அக்கா சின்னமணி வட்டிக்கு காசு தாறீங்களா??
தைமாசம் எனக்கு கலியாணம் இருக்கு வட்டிக்கு காசு தாறீங்களா?

வெளிநாட்டில் படிச்ச மணியக்கா மவளை அப்பாவும் எனக்கு பார்த்திடுவார்
நுனி நாக்கின் மேலே இங்கிலீசு பேசி அவளும் வந்தாலே மகிழ்ந்திடுவார்
அடையாத வேலி தாஞ்சு பாய்ந்து அவளை நானும் பார்ப்பேன்
மரத்தில் மாங்காய் பறிச்சு அவளுக்கு நானும் கொடுப்பேன்
கலியாணம் முடிச்சு விருந்துக்கு போனால் நாளெல்லாம் கொண்டாட்டம் தான்
சின்னமணி அக்கா சின்னமணி வட்டிக்கு காசு தாறீங்களா??
தைமாசம் எனக்கு கலியாணம் இருக்கு வட்டிக்கு காசு தாறீங்களா?

பழஞ்சோத்து ருசியும் பச்சைமிளகாய்க் கடியும் அவளுக்கு நானும் காட்டிடுவேன்
மேல் நாட்டு உணவில் வளர்ந்திட்ட அவளை குத்தரிசி சோறூட்டி ருசிக்க வைப்பேன்
கூடப்படிச்ச பெண்ணுங்கள் எல்லாம் அவளோட அழகில் மயங்கிடோனும்
என்னோட ஆசையும் அவளோட ஆசையும் ஒன்றாக இணைந்து வாழ்ந்திடனும்
பண்பாட்டை மதிக்கும் அழகான பொண்ணு கிடைச்சா சந்தோசம்தான்

சின்னமணி அக்கா சின்னமணி வட்டிக்கு காசு தாறீங்களா??
தைமாசம் எனக்கு கலியாணம் இருக்கு வட்டிக்கு காசு தாறீங்களா?
காஞ்சிபுரம் சாறி சிங்கப்பூர் தாலி பொம்பிளைக்கு நானும் வாங்க வேணும்..
அளவெட்டி மேளம் அன்னரை நாடகம் கலியாணத்துக்கு நானும் பிடிக்க வேணும்

2 Comments:

  • At Monday, December 14, 2009, Anonymous Anonymous said…

    ...please where can I buy a unicorn?

     
  • At Monday, December 28, 2009, Anonymous Anonymous said…

    se puede decir, esta excepciГіn:) de las reglas http://nuevascarreras.com/cialis/ comprar cialis contrareembolso Brillante frase e per tempo comprar cialis barato tessweegbc [url=http://www.mister-wong.es/user/COMPRARCIALIS/comprar-viagra/]viagra cialis[/url]

     

Post a Comment

<< Home