இரசிகை-இரசித்தவை

Friday, July 18, 2008

எனது பார்வையில் காதல்வானம் இசைத்தட்டு வெளியீட்டு விழா!!

வசீகரனின் காதல் வானம் இசைத்தட்டு வெளியீட்டு விழா விற்கு யாழ் உறவுகள் என்றவகையில் அந்நிகழ்விற்கு சமூகம் அளித்து இருந்தோம். அவ் நிகழ்வை பற்றி விமர்சனம்.

மாலை மயங்கும் நேரம். மழைத்தூறல்கள் சிணுங்கி சிணுங்கி நிலத்தை நோக்கி கவி பாடிக் கொண்டிருந்தன. நிகழ்வு சரியாக மாலை 6 மணியளவில் ஆரம்பமாக இருந்தாதல் வேளைக்கு சென்றால் விரைவாக வீடு திரும்பலாம் என்ற நோக்குடன் மண்டபம் நோக்கி விரைந்தோம். பொதுவாக தமிழர்களின் நிகழ்வுகள் எல்லாமே குறித்த நேரத்திற்கு ஆரம்பமாகுவதில்லை என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டு. அந்த அபிப்பிராயத்தை உண்மையாக்கும் விதமாக மண்டபத்திற்குள் நுழைந்தவுடன் வசீகரன் உறவினார் சிலருக்கு அடுத்தாதக நாங்கள் தான் அங்கு நின்றோம். வேற ஆக்கள் ஒருத்தரையும் காணவில்லை. சரி வந்தாச்சு திரும்பிப் போக ஏலாதுதானே என்டு போட்டு வரிசையாக அடுக்கி இருந்த கதிரையில் அமர்ந்தோம். வசீகரன் அந்த விழாவின் நாயகன் விழாவிற்கு ஒழுங்குகளை கவனித்து கொண்டிருந்தார். தனியாக எல்லாவற்றையும் தானாக ஒழுங்கமைத்துக் கொண்டிருக்கையில் எங்களால் உதவி செய்ய முடியாதிருந்தது சிறு கவலையை அளித்தது. அந்த ஒட்டங்களுக்கு இடையிலும் ஒரு மாதிரி எங்களைக் கண்டுபிடித்து சிறு அறிமுகத்துடன் தனது வேலைகளை கவனிக்க தொடங்கி விட்டார். நிகழ்வு இப்போ தொடங்கும் இப்போ தொடங்கும் என்று காத்திருந்தோம். சரியாக மாலை 7:30க்கு தான் நிகழ்வு வசீகரனின் தாயரின் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. (வசீகரன் இனி நடத்தப்போகும் நிகழ்வுகளை என்றாலும் குறித்த நேரத்திற்கு ஆரம்பித்து மற்றவர்களுக்கு முன் மாதிரி இருங்கள்)

சிறுவர்களின் நடன நிகழ்வுகள் மிகவும் அருமையாக இருந்தது. குறிப்பாக வயலின் இசைக்கச்சேரி அளித்த வளரும் கலைஞர்களை பாராட்டமால் இருக்க முடியாது. வயலின் இசையை மிகவும் ரசித்து கொண்டிருந்தவர்களின் கைகளுக்கு சிற்றுண்டிகள் வந்து சேர்ந்தன. அந்த இளம் கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்க முடியமால் எல்லோரும் சிற்றுண்டியை ரசித்து கொண்டிருந்தார்கள். அடுத்து கனடாவில் புகழ் பெற்ற நாடக கலைஞனான கணபதி இரவீந்திரன் வசீகரனின் பாடல்களை விமர்சனம் செய்வதற்காக மேடையேறினார். நல்ல கலைஞனான அவர் வசீகரனின் பாடல்களை முதலே கேட்டு அதற்குரிய விமர்சனத்தை தயாராக்கி கொண்டு வந்திருந்திருந்தால் அவரின் பேச்சு நன்றாக இருந்திருக்கும். மேடையில் நின்றபடியே அவசரமாக பாடல்களை ஒட கேட்டு விமர்சனம் செய்தது கொஞ்சம் சலிப்பாக இருந்தது.

அடுத்து மேடையேறிய பேச்சளார்கள் வசீகரனின் திறமையை மிகவும் போற்றி பேசினார்கள். வசீகரனின் தாத்தாவும் ஓரு தமிழ்ப் புலவர் என்பதையும் நினைவு கூர்ந்தார்கள். அடுத்து இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்வு நடந்தது. வசீகரனின் தாயர் வெளியிட காதல் வானம் இசைத்தட்டின் இசையமைப்பாளாரின் தங்கை முதல் இறுவெட்டை பெற்றார். அடுத்து வந்திருந்தவர்களும் வரிசையாக நின்று இறுவெட்டை பெற்றார்கள். அடுத்து நன்றியுரை கூறுவதற்காக மேடையேறிய விழாவின் நாயகன் வசீகரன் தனக்கு உதவி செய்த எல்லோரையும் நினைவு கூர்ந்தார். இவ் இசைத்தட்டினை வெளியிடுவதற்கு தானும் இசையமைப்பாளாரும் பட்ட கஸ்டங்களையும் நினைவு கூர்ந்தார். எல்லோரும் நன்றி கூறிய வரிசையில் யாழ் உறவுகளையும் நினைவு கூர்ந்து நன்றி கூறியது மிகவும் சிலிர்ப்பாக இருந்தது.

கடைசி நிகழ்வாக ஒரு சில பாடல்களை திரையில் போடப் போகின்றோம் என்று கூறினார்கள். எல்லோருக்கும் பிடித்த யாழ்தேவிப் பாடலையும் பனங்காய்ப் பணியாரப் பாடலையும் பார்க்கும் ஆவலில் நாங்களும் ஆயத்தமானோம். ஆனாலும் தொலைக்காட்சியில் ஏற்பட்ட தொழில் நுட்பம் இடைஞ்சல் கொடுக்க ஒருமாதிரி மடிக்கணணி மூலமாக ஒளிபரப்பத் தொடங்கினார்கள். என்றாலும் நாம் எதிர்பார்த்த பாடல்கள் வருவதாய் இல்லை. நேரம் இரவு 10த் தாண்டிய காரணத்தால் நாங்கள் மண்டபத்தை விட்டு வெளியேறினோம்.

சரி இனி பாடல்களுக்குரிய விமர்சனத்துக்கு வருகின்றேன்.

சாந்துப்பொட்டு வைத்து... என்ற பாடல் ஒரு பெண் தான் ஊரில் செய்த சின்ன சின்ன குறும்புகளை நினைத்து தோழிக்கு வரையும் மடல் போல் அமைந்தது. அருமையான வரிகள் எல்லாமே. மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் வரிகள். என்னை மிகவும் கவர்ந்த பாடலில் இதுவும் ஒன்று. முதல் முதலில் கேட்கும் போது ஒரு இன்பகரமான வாழ்வை இழக்க நேர்ந்திட்டதை எண்ணி கண்கள் குளமாகின. என்னையும் பழைய ஞாபகங்களை மீட்டெடுக்க வைத்தது. ஊருல சாந்துபொட்டு வைச்சு பவுடர் பூசி திரிஞ்ச காலங்கள் பாடசாலைக்கு அணிந்து சென்ற வெள்ளைச் சட்டை பட்டாம் பூச்சிகளாக சிறகடிச்ச பொழுதுகள் மறக்க முடியாதவை. மற்றும் புத்தகங்களுக்கிடையில் ஒளித்து வைத்திருந்த மயிலிறகு குட்டி போடவில்லையே என ஏங்கிய காலங்கள். அத்தனையும் மனத்திரையில் படமாக்கியது இந்த பாடல்கள். கடைசியில் வெள்ளிக்கிழமைகளில் உண்ணும் மரக்கறி சோற்றையும் மறக்கமால் குறிப்பிட்டது ரசிக்க கூடியதாக இருந்தது.

மூங்கில் நிலவென... ஒரு அருமையான காதல் பாடல்.

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்.... என்ற பாடல் ஊரில் இருந்து இடம்பெயர்ந்து பல நாடுகளில் பரந்து வாழ்கிறோம் இல்லையா. பரந்து வாழும் சின்னப்பிள்ளைகளின் பிரச்சினைகளை ஊர் நினைவுகளை மீட்டிச் செல்லும் ஒரு அருமையான பாடல். என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது.

சின்ன சின்ன மழைத்துளி.... என்ற பாடல் காதலுடன் கூடிய மழைக்காலத்தை வர்ணிக்கும் அழகான இனிமையான ஒரு பாடல்.

தை மாசம் பிறந்தாலே.....என்ற பாடல் ஊரை நினைவூட்டும் அருமையான ஒரு பாடல் தான் இதுவும். வருசம் (தை ) பிறந்தாலே வழி பிறக்கும் தைப்பொங்கலை நம்பிக்கையோடு கொண்டாடுவோம் தழிழர்க்கு வழி பிறக்கும் இனி துன்பம் எல்லாம் தொலைந்தது என்ற கருத்தை வலியுறுத்தி அழகாக அமைந்துள்ளது இந்தப்பாடல். எல்லா வரிகளுமே அருமை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

அப்பா என்னும் ஓர் உருவம் என் ஆயுள் முழுவதும் வரும் தெய்வம்... என்ற பாடலை அப்பாக்காக அப்பாவின் முக்க்கியத்துவத்தை அப்பாவினூடான அவரின் உறவை அழகாக எழுதியுள்ளார். அம்மாக்கு எல்லா கவிஞர்களும் நிறைய பாடல்கள் எழுதியுள்ளார்கள். ஆனால் அப்பாக்கான பாடல்கள் ஒரு சிலரே மிகவும் அரிதாக எழுதியுள்ளார். ஆனால் வசீகரன் அப்பாக்கான முக்கியத்துவத்தை கொடுத்து அழகாக அவருக்கும் கவி புனைந்தமை. அவரின் அப்பா பாசத்தை எடுத்துக் காட்டுகிறது.

பள பள பள பார்வைகள்... என்ற பாடல் அழகான இனிமையான அவரின் இளமைக்கால ஆசைகள் எல்லாம் ஒன்று சேர்ந்த கற்பனை நிறைந்த பாடல். நிறையத் தாவணிகளை சைட் அடிச்சு இருக்கிறார் போல...

சின்னமணி அக்கா சின்னமணி வட்டிக்கு காசு தாறிங்களா தை மாசம் எனக்கு கலியாணம் இருக்கு..... என்ற பாடல் ஊர் நினைவை மீட்கும் ஒரு அழகான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஊருல இருக்கிறவை சில பேர் வட்டிக்கு காசு வேண்டி பவுசு காட்டுறவைதானே அதை அழகா கவியாக கொண்டு வந்து அழகான பாடல் ஆக்கியுள்ளார்.

ஒவ்வொரு பாடலா திருப்ப திருப்ப கேட்டன். எல்லாப் பாடலுமே அருமை அருமை அருமை. என்ன காதல் கடிதம் காதல் வானம் என்டு எல்லாம் ஒரே காதல் சம்பந்தமாகதான் எழுதுறாரோ. ஏன் எங்கள் ஈழத்து நிகழ்வுகளையும் எழுதலாமே என்டு மனதில் நினைத்தபடி பாடலைக் கேட்டேன். கேட்ட பின்புதான் புரிந்தது. எனது எண்ணம் தப்பானது எல்லாப் படல்களுமே எம் தாயகத்து நினைவுகள், மற்றும் வாழ்க்கை முறைகளை உள்ளடக்கிய பாடல்கள்தான் என்பது. மொத்தத்துல சிற்சில குறைகள் இருந்தாலும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. வளர்ந்துவரும் இளைஞர்களுக்கு தான் முன்மாதிரியாக இருப்பதோடு அவர்களை ஊக்கப்படுத்தவும் தான் தயங்க மாட்டேன் என்பதை அவரின் கருத்துக்களில் மற்றும் நிகழ்வுகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. இவ்வளவு சிறப்பான கவிஞனை , கலைஞனை யாழ்னூடாக அறிமுகமானதையிட்டு மிக்க மிக்க மகிழ்ச்சி.

சரி எனக்கு எல்லாப் பாடல்களுமே பிடிச்சு இருந்தாலும் ஏனோ தெரியலை இந்தப் பாடலில் ஒரு ஈர்ப்பு இசையா, கவி வரிகளா இல்லை குரலா எதுவென்று தெரியவில்லை. என்னை ஒரே முணு முணுக்க வைத்த வரிகள். இந்தாங்கோ நீங்களும் கேட்டு மகிழுங்கோ சாச்சா நீங்களும் முணு முணுங்கோ.

சின்னமணி சின்ன சின்ன சின்னமணி....

சின்னமணி அக்கா சின்னமணி வட்டிக்கு காசு தாறீங்களா??
தைமாசம் எனக்கு கலியாணம் இருக்கு வட்டிக்கு காசு தாறீங்களா?
காஞ்சிபுரம் சாறி சிங்கப்பூர் தாலி பொம்பிளைக்கு நானும் வாங்க வேணும்..
அளவெட்டி மேளம் அன்னரை நாடகம் கலியாணத்துக்கு நானும் பிடிக்க வேணும்

சின்னமணி அக்கா சின்னமணி வட்டிக்கு காசு தாறீங்களா??
தைமாசம் எனக்கு கலியாணம் இருக்கு வட்டிக்கு காசு தாறீங்களா?

வெளிநாட்டில் படிச்ச மணியக்கா மவளை அப்பாவும் எனக்கு பார்த்திடுவார்
நுனி நாக்கின் மேலே இங்கிலீசு பேசி அவளும் வந்தாலே மகிழ்ந்திடுவார்
அடையாத வேலி தாஞ்சு பாய்ந்து அவளை நானும் பார்ப்பேன்
மரத்தில் மாங்காய் பறிச்சு அவளுக்கு நானும் கொடுப்பேன்
கலியாணம் முடிச்சு விருந்துக்கு போனால் நாளெல்லாம் கொண்டாட்டம் தான்
சின்னமணி அக்கா சின்னமணி வட்டிக்கு காசு தாறீங்களா??
தைமாசம் எனக்கு கலியாணம் இருக்கு வட்டிக்கு காசு தாறீங்களா?

பழஞ்சோத்து ருசியும் பச்சைமிளகாய்க் கடியும் அவளுக்கு நானும் காட்டிடுவேன்
மேல் நாட்டு உணவில் வளர்ந்திட்ட அவளை குத்தரிசி சோறூட்டி ருசிக்க வைப்பேன்
கூடப்படிச்ச பெண்ணுங்கள் எல்லாம் அவளோட அழகில் மயங்கிடோனும்
என்னோட ஆசையும் அவளோட ஆசையும் ஒன்றாக இணைந்து வாழ்ந்திடனும்
பண்பாட்டை மதிக்கும் அழகான பொண்ணு கிடைச்சா சந்தோசம்தான்

சின்னமணி அக்கா சின்னமணி வட்டிக்கு காசு தாறீங்களா??
தைமாசம் எனக்கு கலியாணம் இருக்கு வட்டிக்கு காசு தாறீங்களா?
காஞ்சிபுரம் சாறி சிங்கப்பூர் தாலி பொம்பிளைக்கு நானும் வாங்க வேணும்..
அளவெட்டி மேளம் அன்னரை நாடகம் கலியாணத்துக்கு நானும் பிடிக்க வேணும்

Wednesday, December 05, 2007

இரண்டடிக்குள் இரண்டரை கோடி!

நேற்றுத்தான் அவன் வீடு கட்ட கண்டேன்.....
குடும்பத்தோடு வந்து இன்று குடிபுகுந்து விட்டான்!
அவனும் கறுப்பு ..அவளும் கறுப்பு..
மகனும் கறுப்பு..மகளும் கறுப்பு...

ஆடம்பரம் ஏதுமற்ற வீடு...
அருகில் நடப்பதை பற்றி எந்த
அக்கறையும் அங்கில்லை...
மின்சாரம் இல்லையென்ற கவலை இல்லை..
மேதாவி தனமான பேச்சுகளும் அங்கில்லை...

பசி என்று வந்துவிட்டால்- காதலுடன்..
அவன் இதழால் அவளுக்கு ஊட்டிவிட..
தான் பெற்றதை பிஞ்சுகளுக்கும்- இதழாலேயே பரிமாற
ஒரு அள்ளு உணவுக்குள் நான்கு உயிர்கள் பசியாறுமா?

அழகில்லைத்தான்..அசிங்கம்தான்...
ஒளித்திருந்து பிறர் வாழ்வை பார்ப்பது..
உதவாத பழக்கம் தான்... இருந்தும்
மனம் ஏங்கியது...........

அடடா....
அழகிய வாழ்வென்பதை இவர்களின் பெயரில் மட்டும்
எழுதி வைத்துவிட்டு ஒளிந்து கொண்டவனே..
இறைவா... எங்களுக்கும் கொஞ்சம் தாவேன் என்றபடி!

அங்கே என்னடி பராக்கு- அதட்டினாள் அம்மா..
திரும்பி திரும்பி அவர்களை பார்த்தபடி வீட்டுள் நுளைந்தேன்!
எம்முள் சிலருக்கு ஏன் இப்படி ஒருவாழ்வு இல்லை??
வாழ தெரியவில்லை?? ஆயிரம் ஆயிரம் கேள்விகள் என்னுள்..
செவ்வந்தியை சுற்றிய தேனீக்களாய்..
விடைமட்டும் கடலில் கரைத்த உப்பென இன்னும் காணோம்!

இரண்டடி கூட கொள்ளா கூட்டுக்குள்
இரண்டரை கோடி சந்தோசங்களா?
ம்ம்ம்ம்ம்..........
காகம் கொடுத்து வைத்த பிறவிதான்!!

Thursday, May 17, 2007

உலகத் தமிழர்கள் குற்றவாளிகளா?

வாதப் பிரதிவாதங்களை வாசிக்க
http://www.yarl.com/forum3/index.php?showtopic=20889&st=0


எனது தீர்ப்பு

எல்லோருக்கும் எனது வணக்கம்

யாழ் இணையத்தின் 9 அகவையை முன்னிட்டு இந்தச் சிறப்புப் பட்டிமன்றம் மப்பிள்ளை அவர்களால் ஒருங்கமைக்கட்டு இனிதே நடந்தேறியது. இந்தப்பட்டிமன்றத்தில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றியைக் கூறுக்கொள்வதோடு இதனை சிறப்புற ஒழுங்கு செய்த மாப்பிள்ளைக்கு நன்றுகளும் பாராட்டுக்களும்.அத்துடன் யாழ் இணையத்தின் ஒன்பதாவது அகவையில் யாழ் இணையத்தையும், அதன் நிர்வாகத்தையும், கள உறவுகளையும் மனதாற வாழ்த்திக் கொண்டு விவாவத்துக்கு செல்வோம்.

உலகத் தமிழர்கள் குற்றவாளிகளா?

தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?என்ற தலைப்பிலே உலகத் தமிழர்கள் குற்றவாளிகள் என்றும் சுற்றவாளிகள் என்றும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இங்கே முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அடிப்படையாக வைத்து என்னுடைய தீர்ப்பை முன்வைக்கிறேன்.

அதற்கு முன்பதாக தனிநபர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒரு சமூகத்தைக் குற்றஞ் சாட்ட முடியாது என்பதால் இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற கருத்து நீதிமன்றத்திலே முன்வைக்கப்பட்டிருந்தது.ஆனால் தனிநபர்கள் சேர்ந்ததே சமுதாயம் என்றும், அந்தச் சமூகத்தில் அங்கம் வகிக்கின்ற பெரும்பான்மையானோரின் செயற்பாடுகளுக்கு அந்தச் சமூகம் பொறுப்பெற்றே ஆக வேண்டும் என்றும் இந்த நீதிமன்றம் கருதுவதால் மேற்படி கோரிக்கை முழுமையாக நிராகரிக்கப்படுகிறது.

இனி வாதப் பிரதிவாதங்களை எடுத்து நோக்குவோம்முதலாவதாக ஈழத் தமிழர்கள் குற்றவாளிகளே என்று வாதிட்டவர்கள் பின்வரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்கள்

குற்றச்சாட்டு 1

ஈழத்தில் தமிழர்கள் படும் அவலங்களையும் ஈழத் தமிழர்களுக்குக் காலங் காலமாக இழைக்கப்பட்ட அநீதிகளையும் சர்வதேச அளவில் எடுத்துச் சொல்லப் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

குற்றச்சாட்டு 2

தாயகத்தில் அவலங்களை நேரடியாகச் சந்தித்துவிட்டு வந்தவர்களாய் இருந்த போதும் புலம்பெயர்ந்த சில காலங்களிலேயே அவை அனைத்தையும் மறந்து களியாட்டங்களிலும் விருந்துபசாரங்களிலும் மூழ்கிவிட்டனர்

குற்றச்சாட்டு 3

இங்கே பொருளாதார ரீதியில் வளமாக இருந்த போதிலும் தாயத்திற்கு பொருளாதார ரீதியாக போதிய அளவில் உதவவில்லை

குற்றச்சாட்டு 4

தாயக அவலங்களை ஒரு செய்தியாக மட்டுமே பார்த்துவிட்டு அமைதியாகி விடுகின்றனர்

குற்றச்சாட்டு 5

எமது கலைப்படைப்புக்களைப் புறக்கணித்து அன்னியக் கலைஞர்களின் பின்னால் அலைகின்றனர்

குற்றச்சாட்டு 6

தாய்மொழியாம் தமிழை தமது பிள்ளைகளுக்கு படிப்பிக்க மறந்து விட்டனர்

குற்றச்சாட்டு 7

ஈழத்தமிழர்கள் என்ற பதத்தைப் பாவிப்பதைக் கூட விரும்பாதவர்களாக இருக்கின்றனர்.

குற்றச்சாட்டு 8

ஊடகங்கள் தேசிய நலன்சார்ந்த தேசியப் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருகின்ற நிகழ்ச்சிகளை விடுத்து வியாபார நோக்கத்தோடு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன.

குற்றச்சாட்டு 9

பொது அமைப்புகள் ஆலயங்கள் என்பன சமூக நலன் சார்ந்த தாயகத் தமிழர்களுக்கு பிரயோசமான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆடம்பரத்தையே முதன்மையாகக் கொண்டு செயற்படுகின்றன.

குற்றச்சாட்டு 10

விளையாட்டு நிகழ்வுகளில் சிங்கள அணிகளை ஆதரித்துச் செயற்படுவதன் மூலம் எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகின்றனர்

குற்றச்சாட்டு 11

சிங்கள தேசத்துப் பொருட்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சிங்களத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறார்கள்.

பிரதானமாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் அவர்கள் சுற்றவாளிகள் என்று வலியுறுத்தும் விதமாகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றை இங்கே ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் தொடர்பு படுத்தி பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

குற்றச்சாட்டு 1 இற்குப் (ஈழத்தில் தமிழர்கள் படும் அவலங்களையும் ஈழத் தமிழர்களுக்குக் காலங் காலமாக இழைக்கப்பட்ட அநீதிகளையும் சர்வதேச அளவில் எடுத்துச் சொல்லப் பொதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை) பதிலளிக்கும் விதமாக -ஆர்பாட்டங்கள் ஊர்வலங்கள் என்பவற்றை நடத்தி எமது நிலையை சர்வதேசத்திற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறோம்-வேலைப்பளு, வேகமான வாழ்க்கை முறை என்பவற்றின் காரணமாக பலரால் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியவில்லை-வெளிநாடுகளில் அந்த அந்த நாட்டு சட்ட திட்டங்களின் அடிப்படையிலேயே செயற்பட முடியும். அதனால் நினைத்தபடி போராட்டங்களைச் செய்ய முடியாது. ஒரு வரையறைக்குள்ளேயே செயற்பட முடியும்போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.பினவரும் கருத்துக்களை ஆராய்கின்ற போது :எமது நாட்டு நிலமையை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும் சிங்களத்தின் அராஜக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பல ஆர்ப்பாட்டங்கள் கூட்டங்கள் என்பன நடத்தப்பட்டு வருவது உண்மையே. அதிலும் அண்மைக்காலமாக இத்தகைய நிகழ்வுகள் அதிக அளவில் இடம்பெறுகிறது என்பதும் உண்மையே. ஆனால் இவை போதுமானது என்று இந்த நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அதுமட்டுமன்றி இந்த நிகழ்வுகளில் 10 இற்கும் குறைவானவர்களே கலந்து கொள்கின்றனர்.வேலைப்பளு காரணமாக இத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்று சாட்டுச் சொல்பவர்களை மன்னிக்கவே முடியவில்லை. காரணம் தாயகத்திலே எங்களது சகோதரர்கள் சிங்கள இராணுவத்தினது துப்பாக்கிகளுக்கு முன்னால் அவர்களது அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது கடையடைப்புகள் ஆர்ப்பாட்டங்கள் என்று போராடி வருகின்றனர். இதன் காரணமாக தமது உயிர்களைக் கூடப் பறிகொடுத்தவர்கள் ஏராளம் பேர் இருக்கும் போது நாம் எமது ஒருநாள் வேலையைக் கூடத் தியாகம் செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம் என்று சொல்வது வெட்கக் கேடானதுஅடுத்ததாக வெளிநாட்டுச் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட முடியும் அதனால் பல போராட்டங்களையும் நடத்த முடியவில்லை என்பதும் வலுவற்ற வாதமே. காரணம் இந்த நாடுகளில் தனிமனிதனின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் என்பவற்றை நடத்துவதற்குப் பல சந்தர்ப்பங்கள் இருக்கிறது. அந்தச் சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பாவிக்கவில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகின்றது.

குற்றச்சாட்டு 2 இற்குப் (தாயகத்தில் அவலங்களை நேரடியாகச் சந்தித்துவிட்டு வந்தவர்களாய் இருந்த போதும் புலம்பெயர்ந்த சில காலங்களிலேயே அவை அனைத்தையும் மறந்து களியாட்டங்களிலும் விருந்தபசாரங்களிலும் மூழ்கிவிட்டனர்)பதிலளிக்கும் விதமாக பின்வரும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.- இந்த நாட்டில் காலூன்றி விட்ட தமிழர்களில் பலரும் தாயகத்துக்குத் திரும்பப் போவதில்லை. - இந்த நாட்டில் வாழ்கின்ற போது இந்த நாட்டு மக்களைப் போன்ற வாழ்க்கைமுறையையே வாழ வேண்டியவர்களாக இருக்கிறோம்.மேற்படி கருத்துகளைக் கூட ஏற்றுக் கொள்ளப்பட முடியாத வாதங்களாகவே இந்த நீதிமன்றம் கருதுகிறது.

காலம் காலமாக நாம் நாடு கடந்து வாழ்ந்தாலும் இனிமேல் எமது தாய்நாட்டுக்கு மீளப் போவது இல்லை என்றாலும் கூட எமது தாயகத்தை மறப்பதானது பெற்ற தாயையே மறப்பதற்குச் சமமானது.உலக வரலாற்றை நோக்கினால் ‘இஸ்ரேல்’ என்ற நாடு உருவாக வேண்டும் என்பதற்காக உலகின் பல நாடுகளிலும் தங்களை ஸ்திரப்படுத்தி வாழ்ந்த யூதர்கள் ஆற்றிய பங்கை யாரும் மறப்பதற்கில்லை. அதுமட்டுமன்றி அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளில் பெரும் பதவிகளில் ஆடம்பர வசதிகளுடன் வாழ்ந்தவர்கள் கூட தங்கள் பதவிகளைத் தூக்கியெறிந்து விட்டு தமது நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக தாயகம் திரும்பியது வரலாறு.

குற்றச்சாட்டு 3 இற்கு (இங்கே பொருளாதார ரீதியில் வளமாக இருந்த போதிலும் தாயத்திற்கு பொருளாதார ரீதியாக பொதிய அளவில் உதவவில்லை) பதிலளிக்கும் விதமாக - பல கஷ்டங்களுக்கும் கடன் தொல்லைகளுக்கும் மத்தியிலும் தாயகத்திற்கு எம்மாலான பொருளுதவியை செய்து கொண்டே வருகிறோம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. உண்மையிலே ஈழப் போராட்டத்திற்கு அவசியமான பொருளாதார பலத்தை வழங்குவதில் உலகத் தமிழர்களின் பங்களிப்பே பிரதானமானதாகும். சர்வதேச நாடுகள் பலவும் போட்டி போட்டுக் கொண்டு வழங்கும் இராணுவ உபகரணங்களைக் கொண்டு போராடும் சிறிலங்கா இராணுவத்திற்கு இணையாகப் போராடுவதற்குத் தேவையான ஆயத ரீதியிலான பலத்தைப் பெறுவதற்கு உலகத் தமிழர்களே பெரும் பங்களிப்புச் செய்கின்றனர் என்பதே உண்மையாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு குற்றச்சாட்டு 3 இல் இருந்து உலகத் தமிழர்களை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது.

இதைத் தவிர உலகத் தமிழர்கள் சுற்றவாளிகள் என்ற கருத்துக்கு வலுச் சேர்க்கும் விதமாய் - மலரப் போகும் தமிழீழத்தை தோளில் தாங்கி வளர்த்தெடுக்க இருப்பவர்கள் உலகத் தமிழரே- தமிழ் தெரியாவிட்டாலும் கூட எமது ஊர்வலங்களுக்கு தோள் தரும் பல இளைஞர்கள் உள்ளனர் போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.இவற்றுள் ‘மலரப் போகும் தமிழீழத்தை தோளில் தாங்கி வளர்த்தெடுக்க இருப்பவர்கள் உலகத் தமிழரே’என்ற கூற்றில் அறிவியல் துறைசார்ந்து சற்றே உண்மை இருக்கிறது என்ற போதிலும் கலாச்சார பண்பாட்டு ரீதியாக இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்பது இந்த நீதிமன்றத்தின் அபிப்பிராயமாகும்.

அதைவிட தமிழ் தெரியாத ஒரு சமூகத்தை உருவாக்கியது கூட தமிழர்கள் குற்றவாளிகள் என்ற கருத்துக்கே வலுச் சேர்க்கிறது. தாயக மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு இருந்த போதிலும் மொழியறிவு இல்லாத காரணத்தால் உதவி செய்வதில் இருக்கும் தடைகளை சங்கடங்களை ‘சுனாமி’ தாக்கத்திற்கு உள்ளான மக்களுக்கு உதவி செய்யச் சென்ற எம் இளைஞர் யுவதிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இதைத்தவிர உலகத்தமிழர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் 4 5 6 7 8 9 10 11 என்பவற்றை மறுத்துரைக்கின்ற பொருத்தமான கருத்துக்கள் எதுவும் இந்த நீதிமன்றத்திலே முன்வைக்கப்படவில்லை. எனவே நீதிமன்றத்திலே வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களை மட்டுமே கருத்தில் கொண்டு உலகத் தமிழர்களை பொருளாதார ரீதியாக போதிய உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு 3 இல் இருந்து விடுவிக்கின்ற போதிலும் ஏனைய பத்து விடயங்களிலும் உலகத் தமிழர்கள் குற்றவாளிகளே என்று இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

‘தண்டனை என்பது திருந்துவதற்காகவே’ என்பதால் இதுவரை செய்த குற்றங்களுக்குப் பிராயசித்தம் செய்யும் வகையில் ஈழத்தமிழரின் விடிவிற்காக தமது அனைத்து வளங்களையும் பாவித்து முழுமையாக உழைக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் தீர்ப்பளித்து இந்த வழக்கை நிறைவு செய்கிறது.

நன்றி வணக்கம்
நன்றி கெட்ட நான்..!
================

கண் மூடியபடி நான் பிறந்தேன்..
அன்று முதல் - அம்மா
தன் கண்களை தூக்கம்
காவு கொள்ள விடாதிருந்து
எனைக் காத்தாள்!
எங்கே என்னை எறும்பு
கடித்திடுமோ என்று பயம் அவளுக்கு..

நான் தவழ தொடங்கினேன்..
தரையோடு தனை விழுத்தி
தானும் சேர்ந்து தவழ்ந்து..
என் தத்தக்கா பித்தக்கா என்ற ஊர்தலில்
தன் உயிர் மூச்சை ஒளித்து வைத்தாள் -அம்மா

வளர்ந்தேன்...
கங்காரு போல் எனை உடலில்
காவி காவியே தான் மெலிந்தாள்.

கண்ணு இல்ல.....செல்லம் இல்ல....
காகம் சொல்லு...மேகம் சொல்லு.....
அம்மா...என்னை பேச பழக்கினாள்!

காலம் காற்றில் மிதக்கும் தூசி என பறந்தது!
இப்போ அம்மா கை தடியுடன் நடக்கிறாள்....
தட்டு தடுமாறி படியேறி வருகிறாள்..
பிள்ளை சாப்பிட்டு போட்டு படியேன் என்கிறாள்......
முகம் சிவக்கிறது எனக்கு..........
"உன்னை பேசாம இரு எண்டு சொன்னன் தானேமா..
பெரிய கரைச்சல்" எனக்கு பேச கற்று கொடுத்தவளை
பேசாமல் இருக்க சொல்லி நான் நன்றி செய்தேன்!
என்னை எறும்பு கடித்திடுமோ?
பயந்தவள் மனசை இரை கவ்விய
பாம்பாய் கொன்றேன்!

ஓடி வாடி..ஓடி வாடி....
அம்மா உலகத்தை மறந்து..
என்னுள் மீண்டும் பிறந்து..
நடை பழக்கினாள்!
தன் இரு கை நீட்டி அதனிடையுள்
என்னை நடக்கவைத்தாள்.. எங்கே...
நான் விழுந்து விடுவேனோ என்று பயம் ..அம்மாக்கு!

வாழ்வு புத்தகத்தை கால காற்று மறுபடியும்..
பக்கம் வேறாய் புரட்டுகிறது
அம்மா தலை வெள்ளி சரிகை கொண்டு
நெய்த கறுப்பு துணி என்றாகிறது!

"பிள்ளை கால் வலிக்குது ஒருக்கா
கடைக்கு போட்டு வாயேன்" இது..அம்மா!
"எனக்கு ஏலாது சும்மா போமா" அது..நான்!
முழங்கால் வலிக்க..
முக்கி முனகி அம்மா நடப்பாள் -கடை திசையில்!

எனக்கு நடை பழக்கியவளை..
பாதம் கொதிக்க நடக்கவிட்டு..
நான் நன்றி செய்தேன்!
திரும்பி வந்தபின் தேநீர் போடுவாள்- மூச்சு வாங்குமே!

எனக்கு முதல் தந்துவிட்டு தான் குடிப்பாள்!
கால் கடுக்க சென்றது அவள்....
களைப்பாறியது ..நான்!
எப்படிச் சொல்ல?

இச்சென்று கன்னம் முத்தமிட்டாலும் சரி..
இடியென்று அவள் தலையுள் நான் இறங்கினாலும் சரி..
எதையுமே ஒன்றாய்தான் எடுப்பாள் - அம்மா!

காலம் ஓடும் ...
அம்மா ஒருபொழுதில் காலமாவாள்..
கதறி அழுவேன் ..நான் அம்மா போயிட்டாளே என்றா?
இல்லை இனி எல்லாம் நானேதான் செய்யவேண்டும் என்றுமா? கண்ணீருக்குள்ளும் சுயநலம்..
சீ..
நன்றி கெட்ட நான்!!

Sunday, December 31, 2006

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டில் எங்கள் ஈழம் மலரந்து எல்லா நாளும் இனிய நாளாக வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Tuesday, September 19, 2006

பாலை மரமே பாலை மரமே பார்த்தியா?

தாயகப்பறவைகளுக்காக
http://www.thayakaparavaikal.com/August-poems.html

பாலை மரமே பாலை மரமே பார்த்தியா?
எங்கள் பாலர்கள் நீறானார் பார்த்தியா?
தேக்கு மரமே தேக்கு மரமே பார்த்தியா?
எங்கள் செல்வங்கள் சிதைஞ்சு போச்சே
நீயும் தேம்பி அழுதியா?

யார் மடியில் தலை சாய்த்து அழ?
யாரிடம் சென்று நாம் அவரை திருப்பிக் கேட்க
ஈன்ற தாயும் இழந்தார் ஏந்தி வளர்த்த
தந்தையையும் இழந்தார்..!

வாழ்வு ஒன்று வரும் என்றே
நம்பி எழுந்து நடக்க முனைந்தார்
அந்தோ சிங்கம் பசியாற
சிசுக்களை தின்று தொலைத்தது பார்..!

நந்தவனம் எரிஞ்சு போச்சு
நடுவில் நின்று உறுதி கொள்கிறோம்
சிங்க இன வாழ்வொழித்து அதன்
சிரசுகள் ஒன்றாய் குவித்து
எங்கள் செங்கொடி ஏறும் திருநாள்
வந்தே ஆகும் சொல்கிறோம்..!

Monday, September 04, 2006

தாயகப்பறவைகளுக்கா எழுதிய தாயகவலம்

http://www.thayakaparavaikal.com/August-thayakavalam.html

தாயகவலம் - வட்டுக்கோட்டை

யாழ் மாவட்டத்தின் வலிகாமம் மேற்கில் உள்ள வட்டுக்கோட்டை என்னும் ஊர் பற்றி இன்றைய தாயகவலம் கூறப்போகிறது.

வட்டுக்கோட்டைக்கு வழி எது என்று கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்று சொல்லுவார்கள். வட்டுக்கோட்டை என்ற உடனே அப்பழமொழி தான் ஞாபகம் வருகிறது. மனிதவாழ்விற்கு அத்தியாவசியமான அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டமைந்த வட்டுக்கோட்டை; குடியிருப்பு நிலம், வயல் நிலம், கடல் மூன்றையும் தன்னகத்தே கொண்ட ஊர்.

இங்கு 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி பரவாலகப் பேசப்படும் வட்டுக்கோட்டைத்தீர்மானம் தமிழர் கூட்டணி கட்சியால் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானத்தில் இலங்கையில் தமிழ்த்தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ளவதற்காக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திர இறைமையுள்ள, மதச் சார்பற்ற சோசலிசத் தமிழீழ நாட்டை மீள்விக்க வேண்டுமெனப் பிரகடனம் செய்தது குறிப்பிடத்தக்கமை.
வட்டுக்கோட்டை என்னும் போது வட்டுவடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என உள்ளடக்கிய ஒரு பெரிய பிரதேசத்தையே குறிக்கிறது. சங்கரத்தை சித்தங்கேணி, அராலி, சுழிபுரம், கொட்டைக்காடு, மூளாய், சங்கானை, தொல்புரம் போன்ற ஊர்கள் அருகில் அமைந்திருக்கின்றன. வட்டுக்கோட்டை வைத்தியசாலை, மூளாய் வைத்தியசாலை, கொட்டைக்காட்டு வைத்தியசாலை என்பன இவ்வூரில் பிரபலமான வைத்தியசாலைகள் ஆகும்.


யாழ்ப்பாணக்கல்லூரி முன்பக்க்கம்
யாழ்ப்பாணக்கல்லூரியின் இணையத்தளம் http://www.jaffnacollege.org/

ஆரம்ப காலங்களில் கிறிஷ்தவமிஷனால் நாடாத்தப்பட்ட வட்டுக்கோட்டை செமினறி மிகவும் பிரபல்யமான ஒரு கல்விக்கூடம் ஆகும். அங்குதான் பல கல்விமானகள் தங்கள் ஆரம்பக் கல்வியைக் கற்றார்கள். இவ்வூர் பல படித்த அறிஞர்கள் வாழ்ந ஊர் என்னும் பெருமை பெற்றது. வில்லியம் நெவின்ஸ் அல்லது நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை எனப் பரவலாக அறியப்பட்ட முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தின் கல்வித்துறையில் அறியப்பட்ட ஒருவராக இருந்தார். அவர் தனது ஆரம்பக்கல்வியை தனது 12 வயதில் வட்டுக்கோட்டை செமனறியில் கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களும் தனது பன்னிரண்டாவது வயதில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கிய வட்டுக்கோட்டை செமினறியில் சேர்ந்து, அறிவியல் துறையிலும் பயிற்சி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல கல்விமான்களை வளர்த்துவிட்ட பெருமை வட்டுக்கோட்டையையே சேரும். தற்போதைய காலங்களில் ஆண்டு 1 முதல் 12 வரையிலான வகுப்புக்களை உள்ளடக்கிய மகாவித்தியாலையங்கள் கல்லூரிகள் அயலில் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் போன்றவை அமைந்ததோடு வட்டு இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணக்கல்லூரி, விக்டோரியாக்கல்லூரி போன்றன மிகவும் பிரபல்யமான கல்லூரிகள் ஆகும். மற்றும் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வாசிகசாலை என இவ்வூர் கல்வி கற்பதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மதம் என்று பார்க்கையில் இங்கு பொதுவாக இந்துமதத்தை வழிபடும் மக்கள் குறிப்பாக சைவசமயத்தவர் தான் அதிகம் என்று கூறினாலும் வேறு மத மக்களும் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணகி அம்மன் கோவில், துரட்டிப்பனை அம்மன் கோவில் அடைக்கலம்தோட்டம் கந்தசுவாமி கோவில், பத்திரகாளிகோவில், சிவன்கோவில், என்பன மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஆகும் அத்துடன் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு கோவில்கள் உள்ளன. கண்ணகி அம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் இக் கோவிலில் இன்றும் அப் பழைய கட்டிடமே உள்ளது. அதனை புனரமைக்கும் வேலைகள் தற்போது நடந்து கொண்டிருப்பதாக அறியப்படுகிறது, மற்றும் பத்திராகாளி அம்மன் கோவிலும் மிகவும் தொன்மை வாய்ந்தது இங்கு பழைய காலங்களில் தீர்த்த திருவிழா அன்று ஆடு அடித்து கறி சமைத்து அன்னதானம் வழங்குவது வழக்கமாக இருந்தது ஆனால் தற்போழுது அவ்வழக்கம் வழக்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை என்னும் ஊரில் பலதரப்பட்ட தொழில் செய்யும் மக்கள் வாழ்ந்தாலும் முக்கிய தொழில் விவசாயமாக காணப்படுகிறது. வாழும் நாளில் பல நாட்களை பட்டினியில் போக்கும் சில ஏழை மக்களும் இல்லாமலும் இல்லை. இவ்வூரில் பல்வேறு குழுக்களாக பிரிந்த மக்கள் சாதியம் பார்த்து நீ பெரிது நான் பெரிது என்று ஏட்டிக்குப் போட்டியாக செயற்படுவதும், சண்டைபோடுவதும் குறைவின்றியே இருந்தது. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தின் பின்னர் இந்தப் பிரிவினைகள் எவ்வளவோ குறைந்திருந்தாலும் கூட இன்னும் சாதியம் என்னும் மரக்கொப்பில் ஏறி அமர்ந்திருக்கும் சிலர் இல்லாமல் இல்லை.
இந்திய இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பில் சிக்குண்ட ஊர்களில் வட்டுக்கோட்டையும் ஒன்றே. இந்திய இராணுவ காலங்களில் பெரிதாக பாதிப்புக்களை எதிர் கொள்ளாவிட்டாலும் ஏனைய ஊர்களில் போல் இங்கும் ஆட்களைப் பிடித்தல் அடித்தல் போன்றன சாதாரனமாக நடந்தவையே. வட்டுக்கோட்டையில் உள்ள மக்கள் முதன் முதலாக முன்னேறிப்பாச்சல் தாக்குதலின் போதே 1995 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முதல் எங்கு பிரச்சினை என்றாலும் இவ்வூர் மக்கள் தங்கள் ஊரை விட்டு எங்கும் செல்லவில்லை.

பாரிய அளவில் வசதிகள் அற்ற நிலையிலும் வட்டுக்கோட்டை என்னும் இவ்வூர் எல்லாவகையிலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது. ஈழத்தமிழரின் அரசியலைப் பொறுத்தவரையில் திருப்பு முனையாக அமைந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தால், வட்டுக்கோட்டை என்ற பெயர் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஒரு தனித்துவமாகத் திகழும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

Tuesday, August 08, 2006

பொன் மாலைப் பொழுது...!

என்னைக் கவர்ந்த வைரமுத்துவின் முதல் திரைப்பட பாடலான "இது ஒரு பொன் மாலைப்பொழுது.." என்ற பாடலில் வரும் சரணங்கள் இரண்டைத்தான் அறிந்திருப்பீர்கள். ஆனால் அப்பாடலுக்காக அவர் எழுதியது மூன்று சரணங்கள். இதோ அந்தப் பாடல் விட்டுப்போன வரிகளுடன்..

படம் : நிழல்கள்

இது ஒரு பொன் மாலைப் பொழுது - இது

ஒருஇது ஒரு பொன் மாலைப் பொழுது

வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் கானமிடும்

பூமரங்கள் சாமரங்கள்
வீசாதோ?

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதிதரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்

கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன் ..

(விட்டுப்போனது)

இரவும் பகலும் யோசிக்கிறேன்
எனயே தினமும் பூசிக்கிறேன்
சாலை மனிதரை வாசிக்கிறேன்
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்

பேதங்களே வேதங்களா
கூடாது